அமெரிக்காவை பயங்கர சூறாவளி தாக்கியது
அமெரிக்காவை பயங்கர சூறாவளி தாக்கி 10 மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடியது. அதில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மின் தடை ஏற்பட்டு பல லட்சம் மக்கள் தவிக்கிறார்கள்.
பயங்கர சூறாவளி வீசியது
அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் பயங்கர சூறாவளி தாக்கியது. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்தடுத்து 60 தடவைகள் சுழன்று, சுழன்று வீசியது. அத்துடன் ஐஸ் கட்டி மழையும் கொட்டியது.
இந்த சூறாவளியால் மரங்கள் வேருடன் சரிந்தன. மின்சார கம்பங்கள் முறிந்தன. வீட்டுக்கூரைகள் காற்றில் பறக்க, வாகனங்களை உருட்டிப்போட்டது.
10 மாநிலங்கள் பாதிப்பு
இந்த சூறாவளிக்கு வாஷிங்டன், இல்லியான்ஸ், மிஷிகன், இண்டியானா, கென்துஸ்கி, ஒகிலஹோமா, ஒயோ உள்பட 10 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் பென்சில்வானியா, நியூயார்க், மேரிலாந்து, நியூஜெர்சி ஆகிய பகுதிகளை தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. சிகாகோ உள்பட பல நகரங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது. சாலைகள் முழுவதும் குப்பை, கூளங்கள் மற்றும் மரங்கள் விழுந்துகிடக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவல் தொடர்பு அடியோடு முடங்கியது.
6 பேர் பலி
இந்த சூறாவளிக்கு 80 வயது முதியவர், 78 வயது பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இல்லியான்சில் 3 பேரும், கென்துஸ்கி, இண்டியானா, மிச்சோரி ஆகிய இடங்களில் தலா ஒருவரும் இறந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இதுதவிர நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எலும்பு முறிவு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.
5 கோடி பேர் தவிப்பு
இல்லியான்ஸ், மிஷிகன், இண்டியானா, கென்துஸ்கி ஆகிய இடங்களில் மின்சாரம் இன்றி 5 லட்சம் மக்கள் தவிக்கிறார்கள். வாஷிங்டனில் வசிக்கும் அந்தோணி ஹொவுரே என்பவர் கூறுகையில், ‘எங்கள் வீடு அருகே இருந்த பெரும்பாலான வீடுகளை காணவில்லை. வீடுகளை இழந்தும், மின்சாரம் தடையாலும் மக்கள் அவதிப்படுகிறார்கள்’ என்றார். மற்றொருவர் கூறும்போது, ‘சூறாவளி வருவதை பார்த்ததும் நானும், குடும்பத்தினரும் அடித்தள அறைக்கு சென்று தப்பினோம். திரும்பி வந்தபோது வீட்டின் பெரும்பகுதியை சூறாவளி அடித்துச் சென்று விட்டது’ என்றார்.
சூறாவளி ஏற்படுத்திய பாதிப்பு குறித்து அதிகாரி கூறுகையில், ‘10 மாநிலங்களில் பேரழிவை உண்டாக்கி விட்டது. 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்கிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் சென்று நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
No comments:
Post a Comment