மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் பல நகரங்கள், பிணக்குவியல் பிரதேசங்களாக காட்சியளிக்கின்றன. உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டு அகற்றக்கூட, உறவினர்கள் இல்லாத அவலநிலை தொடர்கிறது.
"ஹையான்' என, பெயரிடப்பட்ட நாசகார புயல், கடந்த 9ம் தேதி, பிலிப்பைன்ஸ் நாட்டை, 360 கி.மீ., வேகத்தில் அதிபயங்கரமாக தாக்கி, 10 ஆயிரம் பேரின் உயிரை பலிவாங்கியது. ஏறத்தாழ 41 மாகாணங்களை தாக்கி பதம் பார்த்த இந்த புயல், 25 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளை வேரடி மண்ணோடு சாய்த்து, சின்னாபின்னமாக்கி, இரண்டரை லட்சம் மக்களை வீடிழக்கச் செய்து நிர்க்கதியாக்கிவிட்டது. வீடு, உடமைகளை இழந்த மக்கள், ஒதுங்க இடமின்றி திறந்த வெளியில், துணிகளையே கூரையாக்கி, பரிதாபமாக படுத்து கிடக்கின்றனர். தொலை தொடர்பு, மின் இணைப்பு, சாலை வசதிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைவதில் தடை ஏற்பட்டுள்ளது. புயலில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் ஆங்காங்கு, அழுகிய நிலையில், துர்நாற்றம் வீசியபடி சிதறி கிடக்கின்றன. அடையாளம் கண்டு, உடல்களை மீட்டு, அடக்கம் செய்யக்கூட வழியின்றி, உயிர்தப்பிய உறவினர்கள் வெவ்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சில இடங்களில் மீட்புக்குழுவினரால் கைப்பற்றப்பட்ட சடலங்கள், சாலையோரங்களில் குவியல், குவியலாக கிடத்தப்பட்டுள்ளன. அவற்றை அப்புறப்படுத்த முடியாத அளவுக்கு சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் மக்களுக்கான நிவாரண உதவிகளை, பல நாடுகள் மேற்கொண்டுள்ளன.
No comments:
Post a Comment