தேவகோட்டை: தேவகோட்டையில் உள்ள பெண் போலீஸ் ஏட்டு வீட்டில், ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை ராம்நகர் வீட்டுவசதி வாரிய அரசு அலுவலர் அடுக்குமாடி குடியிருப்பில், முதல் தளத்தில் வசிப்பவர் மகேந்திரன்,45. கொடுக்கல், வாங்கல் தொழில் செய்கிறார். இவரது மனைவி ஜோதி,40, தேவகோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றுகிறார். நேற்று காலை 8 மணிக்கு, கம்ப்யூட்டர் பயிற்சிக்காக, ஜோதி சிவகங்கைக்கும், பகல் 10 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு மகேந்திரன் பதிவாளர் அலுவலகத்திற்கும் சென்று விட்டனர். மதியம் 2 மணிக்கு வீடு திரும்பிய மகேந்திரன், கதவில் பூட்டிய பகுதி உடைக்கப்பட்டு, திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோக்கள் திறந்து கிடந்தன. இடம் வாங்குவதற்காக தங்களிடமிருந்தும், உறவினர்களிடமிருந்தும் வாங்கிய ரூ. 27 லட்சம் மதிப்புள்ள 88 பவுன் நகைகள்,நெல் விற்று வைத்திருந்த பணம் மூன்றரை லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது தெரியவந்தது. டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி., அஸ்வின் கோட்னிஸ், டி.எஸ்.பி., மங்களேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் சாந்தி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பட்டப்பகலில், 75 வீடுகளுக்கு மத்தியில் உள்ள அலுவலர் குடியிருப்பில்,போலீஸ் ஏட்டு வீட்டில் கொள்ளை நடந்திருப்பது அங்கு வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment