Tuesday, 5 November 2013

செவ்வாயை சுற்ற புறப்பட்டது 'மங்கள்யான்!':

 செவ்வாயை சுற்ற புறப்பட்டது 'மங்கள்யான்!':    10 மாதங்கள் பயணம் செய்து ஆராய்ச்சியை துவக்கும்
சென்னை : செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் சுற்றி வர, 'இஸ்ரோ'வால், 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட, 'மங்கள்யான்' செயற்கைகோளை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., - எக்ஸ்.எல்., சி - 25 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, நேற்று மதியம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 10 மாதங்கள் பயணம் செய்யும், 'மங்கள்யான்' செயற்கைகோள், அடுத்த ஆண்டு, செப்டம்பர், 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தின், சுற்று வட்ட பாதையை அடைந்து, தன் ஆராய்ச்சியை துவக்கும்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர், கனிம வளம், வாயுக்கள் மற்றும் மனிதர் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா என்பது குறித்து ஆராய, 'இஸ்ரோ'வால், 'மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்' திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கு, 'மங்கள்யான்' திட்டம் எனவும் பெயரிடப்பட்டது. 'மங்கள்யான்' செயற்கைகோள், 450 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டது; இதன் எடை, 1,350 கிலோ.'மங்கள்யான்' செயற்கைகோள் திட்டமிட்டபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, நேற்று மதியம், 2:38 மணிக்கு, பி.எஸ்.எல்.வி.- எக்ஸ். எல்., சி-25 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
'மங்கள்யான்' செயற்கைக்கோள், விண்ணில் செலுத்தப்பட்ட, 43:40 நிமிடங்களில், (இந்திய நேரம் - 3:22) புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. தற்போது, 'மங்கள்யான்' செயற்கைக்கோள், பூமியின் புவி வட்ட பாதையில், பூமிக்கு அருகாமையில், 250 கிலோ மீட்டர் தூரத்திலும், தொலைவில், 23,500 கிலோ மீட்டரிலும், நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.மங்கள்யான்' செயற்கைக்கோள், 30 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்து, செவ்வாய் கிரகத்தை அடையும். தற்போது, புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள, 'மங்கள்யான்' செயற்கைக்கோள், டிசம்பர், 1ம் தேதி இரவு, செவ்வாய் கிரகத்திற்கான தன் பயணத்தை துவங்குகிறது.முதற்கட்டமாக, இரண்டு லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை, 'மங்கள்யான்' செயற்கைக்கோள் சென்றடையும். பின், 10 மாதங்களில், படிப்படியாக, அடுத்த ஆண்டு, செப்டம்பர், 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.

No comments:

Post a Comment