Friday, 15 November 2013

கர்நாடகாவில் தனியார் பேருந்தில் தீ விபத்து: 7 பேர் பலி


கர்நாடகாவில் இன்று அதிகாலையில் தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று இரவு 52 பயணிகளுடன் மும்பைக்கு புறப்பட்டது தனியார் வால்வோ சொகுசுப் பேருந்து.
அதிகாலை 3.20 மணியளவில், பேருந்து குனிமெல்லி பாலத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதியது. இதில், பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து சிதறியது. இதன் காரணமாக பேருந்து தீ பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்தவர்களில் 7 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் ஹூப்ளி மருத்துவமனையிலும், லேசான காயங்களுடன் தப்பியவர்கள் ஹவேரி மாவட்ட மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹவேரி போலீஸ் எஸ்.பி. சசிகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஆந்திர மாநிலம் மெஹபூப்நகரில் நடந்த பேருந்து விபத்தில் 45 பேர் உடல் கருகி பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து, கர்நாடகா வடக்கு சரக போலீஸ் ஐ.ஜி பாஸ்கர் ராவ் கூறுகையில்: விபத்து ஏற்பட்டவுடன் பயணிகள் பலரும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு வெளியேறி தப்பியுள்ளனர். 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர் என்றார்.

No comments:

Post a Comment