Sunday, 19 May 2013

பேறுகாலத்தில் பெண்களுக்கு வரும் நீரிழிவு நோய் * குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம்


சென்னை : "பேறுகாலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்க்கு ஆளாகும் பெண்கள், அதற்குரிய சிகிச்சையை எடுக்காவிட்டால், அவர்கள், இந்நோய்க்கு நிரந்தரமாக ஆளாக நேரிடும்' என, இந்திய மகளிர் பாலுறுப்பு மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பின் (எப்.ஓ.ஜி.எஸ்.ஐ.,) தலைவர், ஹேமா திவாகர் எச்சரித்தார். எப்.ஓ.ஜி.எஸ். ஐ., - உலக நீரிழிவு அமைப்பு மற்றும் இந்திய பேறுகால நீரிழிவு ஆய்வு அமைப்புடன் இணைந்து, பெண்களுக்கு, பேறுகாலத்தில் வரும் நீரிழிவு நோயை கண்டறிந்து, சிகிச்சை அளிப்பது குறித்த பயிலரங்கை, ஜூன் 23, ஜூலை 28, ஆகஸ்ட் 25 ஆகிய தேதிகளில், சென்னை மற்றும் கோவையில் நடத்த உள்ளது.

இதில், பங்கேற்கும், நூற்றுக்கணக்கான மகப்பேறு மருத்துவர்களுக்கு, மகப்பேறு நிபுணர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இவர்களுக்கான, இரண்டு நாள் பயிலரங்கை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் சாந்தாராம், சென்னையில் நேற்று துவங்கி வைத்தார். இதுகுறித்து, எப்.ஓ.ஜி.எஸ்.ஐ., தலைவர் ஹேமா திவாகர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு சுரக்கும் ஹார்மோன்களால், இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, பேறுகால நீரிழிவு நோய் வருகிறது. இந்தியாவில், ஆண்டிற்கு சராசரியாக, 2.7 கோடி பெண்களுக்கு, பிரசவம் நடக்கிறது.

இவர்களில், 30 லட்சம் பேருக்கு, நீரிழிவு நோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பேறு காலத்தில் நீரிழிவு நோய்க்கு ஆளாகும் பெண்கள், அதற்குரிய சிகிச்சையை எடுக்கா விட்டால், அவர்கள், இந்நோய்க்கு நிரந்தரமாக ஆளாவதுடன், அவர்களின் குழந்தைகளும், தங்கள் இளமை பருவத்தில், நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த அபாயத்தை தவிர்க்க, கர்ப்பிணி பெண்கள், 12 மற்றும், 25 வது வாரங்களில், நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இவ்வாறு, ஹேமா திவாகர் கூறினார்.

No comments:

Post a Comment