Sunday, 19 May 2013

காதல் திருமணம் செய்த பெண், மாமனார் படுகொலை



நாகர்கோவில் : காதல் திருமணம் செய்த சென்னை இளம்பெண், மாமனார் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். நாகர்கோவில் பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம். பெயிண்டர். இவரது மகன் சிவா (21). பி.காம் பட்டதாரி. இந்நிலையில் சிவாவுக்கும் சென்னை பொன்னேரியைச் சேர்ந்த சவுமியா (21) என்பவருக்கும் மிஸ்டு கால் மூலம் காதல் ஏற்பட்டது. சவுமியா 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். 

கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் நாகர்கோவில் கிருஷ்ணன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு வடசேரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். பின்னர் அவர்கள் கிருஷ்ணன்கோயில் வாத்தியார்விளை ரோட்டில் உள்ள ஒரு வீட்டின் மேல்தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். அவர்களுடன் சிவாவின் தந்தை ஜெயராம் மற்றும் தாயார் வசித்து வந்தனர்.

சவுமியாவுக்கு சபரி, மணிராஜ், கார்த்திக் ஆகிய 3 அண்ணன்களும், சவுந்தர்யா என்ற தங்கையும் கவுசிக் என்ற தம்பியும் உள்ளனர். திருமணமான நாளில் இருந்தே கார்த்திக் சவுமியாவை மிரட்டி வந்துள்ளார். ஆனால், சபரி அன்பாக பழகி வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சவுமியாவின் சித்தி ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி, அண்ணன் சபரி மற்றும் உறவினர்கள் சவுமியாவின் வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம் சபரி அவரது நண்பர்கள் 2 பேர் ஒரு சொகுசு காரில் சவுமியா வீட்டிற்கு வந்துள்ளனர்.

சபரி தனது தங்கையிடம் சிக்கன் குழம்பு சமைத்து வைக்குமாறும், தங்களது துணிகளை துவைத்து போடுமாறும் சொல்லிவிட்டு நண்பர்களுடன் வெளியே சென்றார்.   
இந்நிலையில் நன்கு மது குடித்து விட்டு திரும்பி வந்த சபரி, சிவாவிடம் மொட்டை மாடியில் காயவைத்துள்ள துணிகளை எடுத்து வரும்படி கூறியுள்ளார். சிவா மாடிக்கு சென்றபோது அவரை பின்தொடர்ந்து சபரியின் நண்பர் ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் கீழே சவுமியாவின் அலறல் கேட்டுள்ளது.

அப்போது சபரியும் அவரது நண்பரும் சேர்ந்து சவுமியாவை கழுத்தை அறுத்தும், வயிற்றில் குத்தியும் கொலை செய்தனர். அப்போது மேலே சென்ற நண்பர் சிவாவை தடுத்து நிறுத்தி கழுத்தை அறுத்துள்ளார். அந்த வாலிபரை தள்ளிவிட்டுவிட்டு சிவா கீழே ஓடி வந்துள்ளார். அப்போது சவுமியாவை கொலை செய்த சபரியும் அவரது நண்பரும் சேர்ந்து வீட்டில் இருந்த சிவாவின் தந்தை ஜெயராமின் கழுத்தையும் அறுத்துள்ளனர். 

சிவா கீழே ஓடி வந்ததை கண்ட சபரியும் 2 நண்பர்களும் காரில் தப்பினர். இதையடுத்து சிவாவும் அவரது தந்தை ஜெயராமும் ஆட்டோ மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராம் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் சபரி மற்றும் 2 பேர் தப்பிச்சென்ற கார் வில்லுக்குறி அருகே கைப்பற்றப்பட்டது. இது பற்றி போலீசார் தக்கலை கார் நிறுத்தத்தில் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு வாடகை காரில் அந்த 3 பேரும் தப்பிச்சென்றது தெரியவந்தது. 

போலீசார் மார்த்தாண்டம், களியக்காவிளை, திருவனந்தபுரம் நியமம் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். நியமம் போலீசாரிடம் சபரி என்ற சபரிநாதன், கார் டிரைவர் சேகர் உள்பட 3 பேரும் சிக்கினர். அவர் களை வடசேரி அழைத்து வந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment