Tuesday, 28 May 2013

காங். தலைவரை கொன்று நடனம் ஆடிய மாவோயிஸ்டுகள்

சத்தீஸ்கர்: காங். தலைவரை கொன்று நடனம் ஆடிய மாவோயிஸ்டுகள்
சத்தீஸ்கர் மாநிலம் ஜகதால்பூர் அருகே கீடம் காட்டி என்ற வனப்பகுதியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய யாத்திரையின் போது சுமார் 300 மாவோயிஸ்டுகள் திரண்டு வந்து தாக்குதல் நடத்தினார்கள். 

இதில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்த குமார் படேல், அவரது மகன் தினேஷ், காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மா உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய மந்திரி வி.சி. சுக்லா உள்பட 32 பேர் காயமடைந்தனர். 

காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் திரளப் போவதை அறிந்த மாவோஸ்டுகள் மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். 

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த தர்பா காட்டுப் பகுதியில் காங்கிரசார் யாத்திரை நடத்தியது, மாவோயிஸ்டுகளுக்கு தாக்குதல் நடத்துவதற்கு சுலபமாகி விட்டது. தர்பா காட்டு பகுதியில் தாக்குதல் நடத்தியதும், மாவோயிஸ்டுகள் 300 பேரும் தங்கள் வெற்றியை, அதே இடத்தில் நின்று நிதானமாக கொண்டாடி விட்டுச் சென்றுள்ளனர். 

மாலை 4 மணிக்கு தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் இரவு 9 மணிக்கு போலீசார் வரும் வரை அந்த பகுதியில் கோஷமிட்டப்படி இருந்தனர். காங்கிரஸ் தலைவர்களின் யாத்திரையில் குறுக்கிட்ட மாவோயிஸ்டுகள் வாகன அணிவகுப்பில் வந்த சுமார் 40 கார்களை உடைத்து சேதப்படுத்தினார்கள். 

பிறகு ஒவ்வொரு காரில் இருந்தவர்களில் தங்கள் கொலைப்பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் இருக்கிறார்களா? என்று தேடி, தேடி பிடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதைப் பார்த்த மகேந்திர கர்மா, என்னை மட்டும் பிடித்து கொள்ளுங்கள் மற்ற எல்லாரையும் விட்டு விடுங்கள் என்று கெஞ்சி இருக்கிறார். அவரை துப்பாக்கியின் அடிப்பகுதியால் தாக்கிய மாவோயிஸ்டுகள், அவர் கைகளை பின்புறமாக கட்டினார்கள். பிறகு சுற்றி நின்று கொண்டு சரமாரியாக சுட்டனர். 

துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்ட கர்மா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். கர்மாவுடன் சென்றிருந்த சத்தார் அலி என்ற காங்கிரஸ் தலைவர் கண் எதிரில் இது நடந்தது. 

மகேந்திர கர்மா இதற்கு முன்பு 4 தடவை மாவோ யிஸ்டுகள் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார். 5-வது முயற்சியில் கொல்லப்பட்டதும் மாவோயிஸ்டுகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். கர்மா உடலை சுற்றி வந்து மாவோயிஸ்டுகள் நடனம் ஆடினார்கள். கர்மா உடலை கால் பந்தை உதைப்பது போல உதைத்து அங்கும், இங்குமாக தள்ளினார்கள். சில மாவோயிஸ்டுகள் கர்மாவை கடுமையாக திட்டி கோஷமிட்டனர். 

மகேந்திர கர்மாவை கொன்றதை தங்கள் இயக்கத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக மாவோயிஸ்டுகள் கருதுகிறார்கள். இதனால்தான் அவர்கள் அந்த இடத்திலேயே வெற்றியை கொண்டாடினார்கள். கர்மா உயிரற்ற சடலமாக சரிந்த பிறகும் கூட பல மாவோயிஸ்டுகள் அவர் உடலை தாக்கியபடி இருந்தனர். 

சுற்றி வந்து நடனமாடிய மாவோயிஸ்டுகள் தங்கள் துப்பாக்கி முனையில் பொருத்தப்பட்ட கத்தியால் கர்மா உடலை குத்தி கிழித்தனர். இதனால் கர்மா உடல் மிக கொடூரமாக சிதைந்தது. கர்மாவை கொன்ற விஷயத்தில் மாவோயிஸ்டுகள் இதுவரை இல்லாத அளவுக்கு கொலை வெறியுடன் நடந்து கொண்டனர். 

மகேந்திர கர்மா, உதய் முதலியார் உள்பட சில காங்கிரஸ் தலைவர்கள் சரண் அடைவதற்காக கைகளை தூக்கி நின்ற போதும், மாவோயிஸ்டுகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். கர்மா உடலுக்குள் மட்டும் சுமார் 150 குண்டுகள் பாய்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. சில காங்கிரஸ் தலைவர்களின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. 

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாக்குதல் நடந்த வனப் பகுதியை சுமார் 600 சி.ஆர்.பி.எப். வீரர்கள் முற்றுகையிட்டு மாவோயிஸ்டுகளை தேடி வருகிறார்கள்

No comments:

Post a Comment