Thursday, 23 May 2013

மணப்பெண்ணின் தோழியாக வந்தவளை திருமணம் செய்த ஆண்



ரிஷிவந்தியம் : தாலிகட்டும் நேரத்தில், மணப்பெண் திருமணத்துக்கு மறுத்ததால், தோழியாக வந்த பெண்ணை, கரம் பிடித்தார் மாப்பிள்ளை. விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த சித்தால் கிராமத்தைச் சேர்ந்தவர், மணிவண்ணன், 25; தியாகதுருகம் அடுத்த வாழவந்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா, 21; இவர்களுக்கு, ரிஷிவந்தியம் ராஜ நாராயண பெருமாள் கோவிலில், திருமண ஏற்பாடு நேற்று செய்யப்பட்டிருந்தது. இரு குடும்பத்தினரும், காலை, 6:00 மணிக்கு, மணமக்களை கோயிலுக்கு அழைத்து வந்தனர். கோவில் கருவறை எதிரே, மணமேடையில் காலை, 8:00 மணிக்கு, மணமக்கள் அமர்ந்தனர். சிங்காரம் குருக்கள் மந்திரங்களை ஓதி, தாலி எடுத்து மாப்பிள்ளை கையில் கொடுத்தார். அப்போது, திடீர் என, மணப்பெண் சுலோச்சனா தாலி கட்டிக் கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இரு குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.

சுலோச்சனாவின் பெற்றோரும், உறவினர்களும் சமாதானப்படுத்தி, தாலிக் கட்டிக் கொள்ள கூறினர். அதை ஏற்காமல், மாலையை கழற்றி, கோவிலை விட்டு வெளியேறினார். திருமணம் தடைபட்டதால், மணமகன் குடும்பத்தினர் தவித்தனர். அப்போது, மணப்பெண்ணின் தோழியாக வந்த, வாழவந்தான் குப்பம் கிராமம் ராஜகோபால் - வசந்தா தம்பதியின் மகள், பிரேமலதாவுடன் பேசி, திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர். சுலோச்சனாவை, நிச்சயிப்பதற்கு முன், பிரேமலதாவை, பெண் பார்க்க, மணிவண்ணன் சென்றிருந்ததால், உடனே சம்மதித்தார். உடனடியாக, புதிய கூரைப்புடவை வாங்கி வந்து, அலங்காரம் செய்து பிரேமலதாவை, மண மேடையில் அமர வைத்தனர். காலை, 10:00 மணிக்கு, சிங்காரம் குருக்கள் இவர்களுக்கு, திருமணம் நடத்தி வைத்தார். தாலிக்கட்டும் நேரத்தில், மணமகள் மறுத்ததால், தோழி மணப்பெண் ஆன சம்பவம், ரிஷிவந்தியம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment