தூத்துக்குடி அருகே டி.வி.மெக்கானிக்கை எரித்து கொலை செய்த பெண் நேற்று கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
டி.வி. மெக்கானிக்
தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டியை சேர்ந்தவர் பண்டாரம்(வயது 42). டி.வி. மெக்கானிக். இவருடைய முதல் மனைவி ஈசுவரி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த ஞானமணி என்பவருடைய மனைவி மாலையம்மாள்(50) என்பவருடன் பண்டாரத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன்–மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வந்ததனர்.
பணம் கேட்டு தகராறு
பண்டாரத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், தனது பிள்ளைகளுக்காக அதிகமாக செலவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாலையம்மாளுக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் பண்டாரம் தனது மூத்த மகள் தெய்வக்கனிக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்று மாலையம்மாளிடம் கூறி உள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு நடந்து வந்தது. சம்பவத்தன்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த பண்டாரம் மாலையம்மாளிடம் தகராறு செய்து உள்ளார். பின்னர் மது மயக்கத்தில் படுத்து தூங்கி விட்டார்.
எரித்துக் கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த மாலையம்மாள் ஒரு நீண்ட கம்பில் துணியை சுற்றி ஒரு தீப்பந்தத்தை தயார் செய்தார். பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தூங்கி கொண்டு இருந்த பண்டாரம் மீது ஊற்றினார்.தீப்பந்தத்தை பற்ற வைத்து தூரத்தில் நின்றபடி பண்டாரம் மீது தீவைத்தார். இதனால் தீ மளமளவென பண்டாரம் உடல் முழுவதும் பரவியது. உடனடியாக மாலையம்மாள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
பண்டாரத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தனர். உடனடியாக அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை பண்டாரம் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்கு பதிவு செய்து மாலையம்மாளை கைது செய்தார்
No comments:
Post a Comment