Tuesday, 28 May 2013

ஆபாச நிகழ்ச்சியை ஒளிபரப்பிய "டிவி' சேனலுக்கு அதிரடி தடை


புதுடில்லி: ஆபாசமான வசனங்கள் இடம் பெற்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக, 10 நாட்கள் ஒளிபரப்ப தடை செய்து, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பிரபல, "டிவி' சேனல் நிறுவனம், டில்லி ஐகோர்ட்டில், மேல் முறையீடு செய்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த, "காமெடி சென்ட்ரல்' என்ற, "டிவி' சேனல் நிறுவனம், இந்தியாவிலும், காமெடி மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

இந்த, "டிவி' சேனல், சமீபத்தில் ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சியில், ஆபாசமான வார்த்தைகளும், பெண்களை தரக் குறைவாக சித்தரிக்கும் வார்த்தைகளும் இடம் பெற்றதாக, புகார் எழுந்தது.இதையடுத்து, மத்திய அமைச்சரவை குழு பரிந்துரையின்படி, இந்த, "டிவி' சேனல் நிறுவனத்தின் ஒளிபரப்பை, 10 நாட்களுக்கு தடை செய்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட, "டிவி' சேனல் சார்பில், டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த, டில்லி ஐகோர்ட், "தங்களுக்கு எதிராக, அரசு பாரபட்சமாக செயல்படுவதாகவும், ஒளிபரப்பு நுகர்வோர் புகார் கமிட்டியுடன், கலந்தாலோசிக்காமல், மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாகவும், "டிவி' சேனல் நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது' என கூறி, அந்த மனுவை, நிராகரித்தது.இதை எதிர்த்து, அந்த, "டிவி' சேனல் நிறுவனம், டில்லி ஐகோர்ட்டின் நீதிபதிகள், "பெஞ்ச்'சில், மேல் முறையீடு செய்துள்ளது. மேல் முறையீட்டு மனுவில், "அரசின் இந்த தடை காரணமாக, எங்களுக்கு, பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். எங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment