Saturday, 25 May 2013

புதுமாப்பிள்ளை லாரி முன் பாய்ந்து தற்கொலை




கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மாளிகைபரம்பை சேர்ந்தவர் அசனார். இவரது மகன் அலி அக்பர் (வயது 26). துபாயில் வேலை செய்து வந்தார். அலி அக்பருக்கு இன்று காலை (சனிக்கிழமை) திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக 20 நாள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. திருமண மண்டபத்திலும் தோரணங்கள் அலங்கரிக்கபட்டிருந்தன. உறவினர்களும், நண்பர்களும் மாப்பிள்ளை அலிஅக்பர் வீட்டில் குவிந்தனர்.

திருமண வீடு களை கட்டியிருந்தது. சந்தோஷமாக உறவினர்களும், நண்பர்களும் உரையாடிக் கொண்டிருந்தனர். புதுப்பெண்ணும் எதிர்கால கனவோடு காத்திருந்தார். இந்நிலையில் நேற்று அலிஅக்பர் தனது நண்பர் ஷாஜகானுடன் கடைவீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு தேவையான பொருட்களை வாங்கினார். பின்னர் வீடு திரும்ப தயாரானார். மோட்டார் சைக்கிளை நண்பர் ஷாஜகான் ஓட்டினார்.

மோட்டார் சைக்கிள் வீட்டின் அருகே வந்தது. பின்னால் புதுமாப்பிள்ளை அலிஅக்பர் அமர்ந்திருந்தார். அப்போது எதிரே லாரி வந்தது. கதை, கற்பனையில் கூட எதிர்பாராத வகையில் திடீரென அலிஅக்பர் மோட்டார் சைக்கிளில் இருந்து தாவி லாரி முன்பு பாய்ந்தார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து நண்பர் கண்முன் பரிதாபமாக இறந்தார்.

அதிர்ச்சியில் உறைந்த நண்பர் இதுகுறித்து திருமண வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். ரத்தவெள்ளத்தில் கிடந்த புதுமாப்பிள்ளை அலிஅக்பரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறித்துடித்தது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. திருமண வீடு துக்கவீடாக மாறியது.

இதுகுறித்து ஆலத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அலிஅக்பரின் உடலை கைப்பற்றி ஆலத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வாய்நிறைய வாழ்த்தி அட்சதை தூவ வந்தவர்கள் அமரர் ஊர்திக்காக காத்திருந்ததும், புதுமாப்பிள்ளையின் திருமணபந்தல் அவரின் இறுதி மரியாதைக்காக காத்திருப்பதும் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

புதுமாப்பிள்ளை அலிஅக்பர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து ஆலத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment