சுடுகாட்டில் மர்மச்சாவு
நெல்லை சந்திப்பு கருப்பந்துறை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பட்டன் (வயது 70). அவருடைய மகன் சேகர் (40). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி, மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளன.
சேகருக்கு மதுப்பழக்கம் இருந்தது. குடித்துவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக சேகரிடம் கோபித்துக் கொண்டு அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். பிள்ளைகள் 2 பேரை உடன் அழைத்துச் சென்றுவிட்டார். ஒரு குழந்தை மட்டும் சேகருடன் இருந்தது.
நேற்று முன்தினம் கருப்பந்துறை சுடுகாட்டு கொட்டகையில் மர்மமான முறையில் சேகர் இறந்து கிடந்தார். மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில், சேகர் இறந்துவிட்டதாக கூறினார்கள். மகனின் உடலை பார்த்து தந்தை பட்டன் கதறினார்.
கழுத்து நெரித்து கொலை
தகவல் அறிந்ததும் நெல்லை சந்திப்பு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சேகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே சேகரின் கழுத்து நெரிக்கப்பட்டதும், முகத்தில் காயம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பது உறுதியானதால் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.
சேகரின் தந்தை பட்டன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிர விசாரணை நடந்தது.
அடித்து கொலை
பெற்ற மகனை பட்டன் அடித்துக் கொன்றது விசாரணைக்கு பின்னர் தெரியவந்தது. மதுப்பழக்கம் இருந்ததால் சேகருக்கும், அவருடைய தந்தை பட்டனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மது குடிப்பதற்கு சேகர் பணம் கேட்டதால் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
தந்தையை அவர் தாக்கினார். ஆத்திரத்தில் பட்டன் பதிலுக்கு தாக்கியதில், முகத்தில் காயம் அடைந்து சேகர் கீழே போய் விழுந்தார். பின்னர் மகனை கழுத்தை நெரித்து பட்டன் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
கொலையை மறைக்க, சேகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக மற்றவர்களிடம் பட்டன் கூறினார். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னர் உண்மை வெளியே வந்துள்ளது.
போலீசார் முதியவர் பட்டனை கைது செய்து, நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
No comments:
Post a Comment