இந்திய சமூகத்தினரின் சில அடையாளங்கள் மெல்ல மாறிக்கொண்டு வருகின்றன. நகர்ப்புறங்களில் வாழும் துணையை இழந்த முதியவர்கள் தனிமையில் வாடுவதைத் தவிர்க்க திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் மற்றவருடன் சேர்ந்து வாழ்வதை நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளனர். மேல்நாட்டு மக்களிடையே சகஜமாக உள்ள இந்தப் பழக்கம், இப்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
அரசு சாரா அதிகாரியான வினா முல்யா அமுல்யா என்பவர், இதுபோன்று தனித்திருக்கும் முதியவர்களுக்கான ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, டிக்னிட்டி பவுண்டேஷன் என்ற அமைப்பு கடந்த சனிக்கிழமை மும்பை தேஜ்பால் ஹாலில், ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. விளையாட்டுக்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியானது இரவு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விருந்துடன் நிறைவடைந்தது. திரைப்படத்துறையினர் சிலர் சேர்ந்து, இவ்வாறு சேர்ந்து வாழ்தலின் நன்மை, தீமைகளை விவாத நிகழ்ச்சியாக நடத்தினர்.
இந்த அமைப்பின் வழக்கறிஞர் கல்யாணி ஷா, திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்வதில் உள்ள இல்லற ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களைத் தெளிவுபடுத்தினார். இந்த அமைப்பினை ஏற்படுத்திய ஷீலு ஸ்ரீனிவாசன், தங்களுக்குத் தனிமையில் தவிக்கும் முதியவர்களிடம் இருந்து அழைப்புகள் அதிக அளவில் வருகின்றன என்றும், அவ்வாறு அழைப்பவர்களை இதுபோன்று இருபாலாரிடமும் நட்பு ஏற்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்குவதோடு, அதுபோல் வாழ்பவர்களைப் பற்றி தங்களுடைய பத்திரிகையில் வெளியிடுவதாகவும் கூறுகின்றார்.
முறையாகத் திருமணம் செய்துகொள்வது என்பது, அவர்கள் வீட்டில் உள்ள இளையவர்களுக்கும் சட்டப் பிரச்சினைகளைத் தருகின்றது. மேலும், ஏற்கனவே தனிமையில் வாடும் இவர்களுக்கு புதிய திருமண பந்தம் நிலைக்காமல் போனால் மேலும் மன அழுத்தம் உண்டாகக்கூடும் என்பதால், தோழமை உணர்வுடன் வாழ்தலை விரும்புகின்றனர் என்றும் ஷீலு ஸ்ரீனிவாசன் தெரிவிக்கின்றார். இந்தத் தகவலை மனநல மருத்துவரான அஞ்சலி சகப்பிரியாவும் ஆமோதிக்கின்றார்.
No comments:
Post a Comment