வேலைக்கு செல்ல கல்வி மற்றும் உடல் தகுதி இருந்தும், வேலைக்கு செல்லாமல் வீட்டில் சும்மா இருந்து கொண்டு, மனைவியிடம் கணவன் ஜீவனாம்சம் கேட்பதை ஏற்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
என்ஜினீயர் தம்பதிகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 32). அம்பிகா (29). (இருவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் இருவருக்கும், 21–11–2007 அன்று திருமணம் நடந்தது.
அப்போது, ராகேஷ், ஏர்டெல் நிறுவனத்தில் என்ஜினீயராக மாதம் ரூ.17 ஆயிரம் சம்பளம் வாங்கினார். அம்பிகா, டாட்டா நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக, மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்கினார்.
திருமணமான சில நாட்களில் ராகேஷ், தான் வேலைக்கு செல்ல விரும்பவில்லை. தனியாக தொழில் செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
விவாகரத்து வழக்கு
ஆனால் வேலைக்கும் செல்லாமல், தொழில் எதுவும் செய்யாமல் குடிபழக்கத்துக்கு அடிமையாகி, மனைவி அம்பிகாவை பல வழிகளில் துன்புறுத்தியுள்ளார். மேலும் அம்பிகாவிடம் இருந்து, 30 சவரன் தங்க நகைகளையும் பறித்துக்கொண்டார்.
இந்த கொடுமையை தாங்க முடியாமல், ராகேஷிடம் இருந்து விவாகரத்து கேட்டு ராசிபுரம் சார்பு கோர்ட்டில் 2009–ம் ஆண்டு அம்பிகா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
ஜீவனாம்சம் கேட்டு மனு
இந்த நிலையில், ராசிபுரம் கோர்ட்டில் ராகேஷ் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் வருமானம் இன்றி உள்ளேன். என் மனைவி அம்பிகா பெருந்தொகையை சம்பளமாக பெற்று வருகிறார்.
அவரது வருமானத்தை நம்பி உள்ளேன். எனவே எனக்கு மாதம் ரூ.5 ஆயிரம் இடைக்கால ஜீவனாம்சம் வழங்கவும், விவாகரத்து வழக்கை நடத்த ரூ.20 ஆயிரம் வழங்கவும் என் மனைவிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை ராசிபுரம் கோர்ட்டு 2010–ம் ஆண்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கணவனின் கடமை
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சீராய்வு மனுவை ராகேஷ் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்து, பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–
உழைத்து, சம்பாத்தியம் செய்து மனைவி, மக்களை காப்பாற்றுவது என்பது ஒரு ஆண் மகனின் கடமையாகும். அதே நேரம், தம்பதியர்களில் ஒருவர் ஊனம் உள்ளிட்ட காரணத்தினால், வருமானம் இல்லாமல் இருக்கும்போது, அவர்களில் ஒருவர் வருமானம் பெறும்போது, அவரிடம் இருந்து மற்றவர் ஜீவனாம்சம் பெற இந்து திருமண சட்டத்தில் வழிவகை உள்ளது.
கேட்க முடியாது
அதே நேரம் ஒரு வழக்கில், ராஜஸ்தான் ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பில், கணவர் வேலைக்கு செல்ல தகுதி இருந்தும், வேண்டுமென்றே வேலைக்கு செல்லாமல், மனைவியிடம் இருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என்று கூறியுள்ளது.
இந்த வழக்கில், ராகேசுக்கு 32 வயதுதான் ஆகிறது. அவர் வறுமையிலோ, ஊனமுற்றோ இருக்கவில்லை. அவர் வேலைக்கு சென்று சம்பாத்தியம் செய்யும் நிலையில், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்.
எனவே இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு மனுதாரர் ராகேஷ் தாக்கல் செய்த மனுவை கீழ் கோர்ட்டு தள்ளுபடி செய்தது சரிதான். இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment