Tuesday, 28 May 2013

ஸ்ரீரங்கப்பட்டணத்தில் முஸ்லீம் பல்கலைக்கழகம் அமைக்க பாஜக எதிர்ப்பு


மத்திய சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முர்ஷிதாபாத்(மேற்குவங்கம்), மல்லபுரம்(கேரளம்), கிஷன்கஞ்ச்(பிகார்), அஜ்மர்(ராஜஸ்தான்), ரேபெரேலி(உத்திரபிரதேசம்), ஸ்ரீரங்கப்பட்டணா(கர்நாடகம்)ஆகிய நகரங்களில் 6 மத்திய பல்கலைக்கழகங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு(யூஜிசி)முன்னாள் தலைவர் எஸ்.தோரட் அளித்த அறிக்கையின்படி, புதிய பல்கலைக்கழகங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ரகுமான்கான் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு கர்நாடக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பெங்களூரில் கர்நாடக பாஜக செய்தித்தொடர்பாளரும், எம்.எல்.சி.யுமான ஜி.மதுசூதன்,செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுதந்திரத்திற்கு முன்பு இந்து, முஸ்லீம்களை பிளவுப்படுத்தும் நோக்கில், ஆங்கிலேயர்களின் பேராதரவுடன் அலிகார்க் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் தான் சிமி என்ற பயங்கரவாத இயக்கத்தை தொடங்கி, பல்வேறு பயங்கரவாதச்செயல்களில் ஈடுபட்டனர்.
முஸ்லீம் மாணவர்கள் படிப்பதற்கு ஏராளமான பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது, முஸ்லீம்களுக்கு தனி பல்கலைக்கழகம் தொடங்குவது தேவையற்றது. இது அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது. மதபிரிவினைவாதத்திற்கு இது தூண்டுகோலாக இருக்கும். ஸ்ரீரங்கப்பட்டணாவில் முஸ்லீம் பல்கலைக்கழகம் தொடங்க ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். பாஜக அரசும் அப்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆட்சி மாறியுள்ள நிலையில், மீண்டும் பல்கலைக்கழகங்களை தொடங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது சரியல்ல.
மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் மத அடிப்படையிலான பல்கலைக்கழகங்களை மத்திய அரசு தொடங்குகிறது. தங்கள் மதம், மொழியை மேம்படுத்த மத,மொழி சிறுபான்மையினர் தனியாக கல்விநிறுவனங்கள் தொடங்க அரசியலமைப்புச்சட்டத்தில் இடமிருக்கிறது.ஆனால் அந்த முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபடுவதை கண்டிக்கிறோம். இந்தியா மதசார்பற்ற நாடு.இங்கு மதவாதத்திற்குஇடமளிக்கக்கூடாது. மதநல்லிணக்கம், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக முஸ்லீம் பல்கலைக்கழகம் தொடங்க உத்தரவிட்டுள்ள மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ரகுமான்கான், உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காத நிலையில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment