Tuesday, 28 May 2013

முஸ்லீம்கள் அதிக குழந்தைகள் பெற கட்டுப்பாடு: ஆங் சாங் சூகி கண்டனம்

மியான்மரில் முஸ்லீம்கள் அதிக குழந்தைகள் பெற கட்டுப்பாடு: ஆங் சாங் சூகி கண்டனம்
மியான்மரின் மேற்கு பகுதியில் வங்காளதேச எல்லையில் ராக்கின் மாகாணம் உள்ளது. இது ரோகியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த பகுதிகளில் முஸ்லீம்களுக்கும், புத்த மதத்தினருக்கும்  கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் வன்முறைகளில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 25 ஆயிரம் முஸ்லீம்கள் வீடுகளை இழந்தனர். உலகிலேயே அதிக அளவில் தாக்குதலுக்கு உள்ளானது ரோகியா முஸ்லீம் இனம் என்று கூறப்படுகிறது. 

கலவரம் குறித்து விசாரணை நடத்த அரசு ஒரு குழுவை அமைத்தது. அக்குழு நடத்திய விசாரணையில் முஸ்லீம்களின் மக்கள் தொகை பெருக்கமே மதக்கலவரம் ஏற்பட காரணம் என தெரியவந்தது. இந்த மாகாணத்தில், புத்தமதத்தினரைவிட முஸ்லீம்களின் மக்கள் தொகை 10 மடங்கு அதிகம் இருப்பதால் தான் இந்த கலவரம் உருவானது என்று அக்குழு தெரிவித்தது. 

எனவே, மியான்மரில் முஸ்லீம்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மியான்மரில் ராகின் மாகாண முஸ்லீம்கள் குடும்பத்துக்கு தலா 2 குழந்தைகள் மட்டுமே பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லீம்களின் பலதார திருமணத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய திட்டத்துக்கு மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சாங் சூகி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 

முஸ்லீம் தம்பதியர் இரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டு மனித உரிமைகளுக்கு எதிரானது, பாரபட்சமானது. 

மியான்மரின் நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. நிர்வாகத்தில் உள்ளவர்களின் தலையீடு அதிகரித்து வருகிறது. நீதித்துறை நம்பகத்தன்மை பெற சுதந்திரமாக செயல்பட வேண்டும். 

உலக அளவில் மியான்மருக்கு, அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய ஒரு பொது அடையாளத்தை உருவாக்க வேண்டும். புத்த மதத்தினர், கிறிஸ்துவர்கள், இந்துக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் தேசிய அடையாளத்தில் பங்குவகிக்க வேண்டும். 

அனைத்து விதமான பாகுபாடுகளையும் நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இரு இனங்களுக்கிடையே நடக்கும் வன்முறையை நிறுத்த வேண்டும். வன்முறை நடைபெற காரணமானவர்களை நீதியின் முன் நறுத்த வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment