கரப்பான் பூச்சிகளை ஒழிப்பதற்கு வீடுகளில் வைக்கப்படும் பொறிகளில் பயன்படுத்தப்படும் இனிப்பு உணவுகளை நாடாமல் இருக்கும் குணாதிசயம் சிலவகை கரப்பான் பூச்சிகளிடத்தில் இயல்பாகவே வளர்ந்திருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த வகையான உணவுப் பொருட்களை அண்டாமல் இருக்கும் பழக்கம் இந்த கரப்பான் பூச்சிகளிடத்தில் ஒருசில ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்திருப்பதாகவும் வடக்கு கரோலினா அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வகை கரப்பான் பூச்சிகளிடத்தில் வளர்ந்துள்ள இந்தப் பழக்கம் பூகோள ரீதியிலும் உலகின் பல பாகங்களிலும் உள்ள கரப்பான் இனங்களிடத்திலும் வேகமாக பரவிவருவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் தென்-கொரியா ஆகிய நாடுகளிலிருந்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 19 வகையான கரப்பான் பூச்சி இனங்களில் 7 இனங்களிடத்தில் சீனி- உணவுப் பொறியில் சிக்காமல் அந்த உணவுகளை வெறுக்கும் போக்கு வளர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
தமக்கு தீங்கு ஏற்படுத்தும் இனிப்பு உணவுகளைத் தவிர்க்கும் இயல்பு, கரப்பான் பூச்சிகளின் அடுத்தடுத்த பரம்பரைகளில் இயல்பாகவே மரபணு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
உயிர் ஆபத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பும் இயல்புகொண்ட கரப்பான் பூச்சி வகைகள் பெருகும் வாய்ப்பு இதன்மூலம் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
விஞ்ஞானிகள் இப்போது தான் இந்தப் போக்கை ஆய்வு ரீதியாக கண்டறிந்திருந்தாலும், எலிகள் மற்றும் பூச்சி இனங்களை கட்டுப்படுத்தும் மருந்துகளைத் தயாரிக்கும் கம்பனிகள் ஏற்கனவே இதனை அறிந்து வைத்துள்ளன.
அதற்காக தமது உணவுப் பொறிகள், மருந்துகளில் புதிய வகைகளை அவ்வப்போது அந்தக் கம்பனிகள் அறிமுகப்படுத்திவருகின்றன.
No comments:
Post a Comment