,
திருப்பத்தூரில் கனமழையின் காரணமாக சினிமா தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் படம் பார்த்து கொண்டு இருந்த 3 பேர் பரிதாபமாக செத்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
சினிமா தியேட்டர்
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள ராமக்காபேட்டையில் உள்ளது முருகன் தியேட்டர். இந்த தியேட்டரில் நேற்று சத்யராஜ் நடித்த நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ. திரைப்படம் ஓடியது. பிற்பகல் 2 மணிக்கு 2வது காட்சி நடந்தது. மாலை 4 மணிக்கு இடைவேளை விடப்பட்டது. இடைவேளை முடிந்ததும் தொடர்ந்து படம் ஓடியது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.
பலத்த மழை
அப்போது, திடீரென திருப்பத்தூர் பகுதியில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருந்ததால், தியேட்டரின் முன்பக்கம் உள்ள சுவர் தியேட்டரின் மேற்கூரையில் இடிந்து விழுந்தது. சுவரின் கனம் தாங்க முடியாமல், மேற்கூரையும், சுவரும் தியேட்டரின் உள்ளே இருக்கைகளில் பயங்கர சத்தத்துடன் படம் பார்த்து கொண்டு இருந்தவர்கள் மீது விழுந்தன.
3 பேர் பலி
அப்போது இருக்கைகளில் அமர்ந்திருந்த 3 பேர் சுவரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர். காயம் அடைந்தவர்கள் மரண ஓலத்துடன் தியேட்டரில் இருந்து அலறி அடித்து கொண்டு வெளியே வாசலுக்கு வந்தனர். ரசிகர்களும் தியேட்டரில் இருந்து அடித்து பிடித்து வெளியே ஓடி வந்தனர். உடனடியாக திரைப்பட காட்சி நிறுத்தப்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு படையினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
5 பேர் படுகாயம்
போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தியேட்டரில் இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் சப்கலெக்டர் ஷில்பாபிரபாகர், கே.ஜி.ரமேஷ் எம்.எல்.ஏ. ஆகியோரும் விரைந்து வந்து தியேட்டரை பார்வையிட்டனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இடிபாடுகளில் சிக்கி இறந்த 3 பேர்களில் 2 பேர்களின் பெயர் விவரம் மட்டும் தெரியவந்தது. மற்றொருவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.
கல்லூரி பேராசிரியர்
இறந்த 2 பேரின் விவரம் வருமாறு :
1. கோபிநாத் (வயது 38), திருப்பத்தூர் அவுசிங்போர்டு பகுதி 1, இவர் திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர்.
2. ராஜசேகர் (32), பாபுநகர், ஜோலார்பேட்டை.
மேலும், படுகாயம் அடைந்த ஜோலார்பேட்டை இடையம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சிவக்குமார் (28), திருப்பத்தூர் அருகே விஷமங்கலத்தை சேர்ந்த முனுசாமி மகன் தமிழரசு (39). திம்மணாமுத்தூரை சேர்ந்த சென்னையன் மகன் கோவிந்தராஜ் (38), சின்னகம்மியம்பட்டை சேர்ந்த இளம்பரிதி, ஸ்ரீதர் ஆகிய 5 பேர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயம் அடைந்தவர் பேட்டி
படுகாயம் அடைந்த சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
நேற்று பிற்பகலில் 2ம் ஆட்டம் சினிமா பார்த்துக்கொண்டு இருந்தேன். மாலையில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. மாலை சுமார் 4.45 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் மேலே இருந்த சுவர் இடிந்து இருக்கைகளில் விழுந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கிய எனக்கு கால், இடுப்பு, தலையில் படுகாயம் ஏற்பட்டது. இடிந்து விழுந்த சுவரை தாங்க கூட முடியாதபடி தியேட்டரின் மேற்கூரை இருந்தது தான் இந்த சம்பவத்துக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment