இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. மாஜி பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 126 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அடுத்த நிலையில், இம்ரான் கான் கட்சி இடம் பிடித்துள்ளது. இதனால் 3-வது முறையாக நவாஸ் ஷெரீப் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 343 உறுப்பினர் இடங்கள் உள்ளன. இவற்றில் 272 தொகுதிகளுக்கும், 4 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்தது. தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. தலிபான் தீவிரவாதிகளின் மிரட்டல், ஆங்காங்கே குண்டுவெடிப்பு நடந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையர் பக்ருதீன் இப்ராகிம் தெரிவித்தார்.
கடந்த 1977ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் பாக். தேர்தலில் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிக வாக்குகள் பதிவானதால், பாகிஸ்தானில் பெரும்பாலான மக்களின் எண்ணம் பிரதிபலிக்கும் என்று அரசியல் கட்சியினர் கூறினர்.இந்நிலையில், நேற்று தேர்தல் முடிந்த சில மணி நேரங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தேர்தல் அதிகாரிகள், அரசியில் கட்சியினர் முன்னிலையில் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதிகாரபூர்வமான முடிவு இன்று அறிவிக்கப்பட உள்ளது. பெண்கள், முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்ட 70 தொகுதிகள் தவிர மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 250 தொகுதிகளில் முன்னணி நிலவரம் வெளியானது. இதில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி 126 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. இம்ரான் கானின் கட்சி 35 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிக இடங்களில் நவாஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் இருப்பதால் அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்பது உறுதியாகி உள்ளது. பெரும்பான்மை கிடைக்காவிட்டால், இம்ரான் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது. தேர்தலின்போது நவாஸ் உள்பட அனைத்து கட்சி தலைவர்களையும் இம்ரான் கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலம் சர்கோதா தொகுதியில் போட்டியிட்ட நவாஸ், 19,125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இம்ரான் கட்சி வேட்பாளருக்கு 6,605 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. அதேபோல் பெஷாவர் தொகுதியில் போட்டியிட்ட இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளார். அவர் 66,464 வாக்குகள் பெற்றுள்ளார். தற்போது ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி 32 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியில், முன்னாள் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், முன்னாள் பிரதமர் கிலானியின் 2 மகன்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வி அடைந்துள்ளனர். தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க 172 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலம்தான் அதிக தொகுதிகளை கொண்டது. இதில் அதிக இடங்களை பெறும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1990-93, 1997-99ல் இரண்டு முறை நவாஸ் பிரதமராக பதவி வகித்துள்ளார். 99-ம் ஆண்டு ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தார். அதன்பிறகு, பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் நீக்கப்பட்டார். ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் சவுதி அரேபியாவில் தஞ்சம் அடைந்த நவாஸ், தேர்தலை சந்திப்பதற்காக மீண்டும் பாகிஸ்தான் வந்தார்.
No comments:
Post a Comment