Thursday, 19 December 2013

‘வறண்ட குளியல்’’ முறை கண்டுபிடிப்பு

கடுமையான குளிர் வாட்டி எடுக்கும் இந்த நேரத்தில் பலருக்கும் அதிகாலையில் குளிக்க தயக்கமாக இருக்கும். குளிர் என்றில்லை, திடீரென்று தண்ணீரே இல்லாத ஒரு இடத்தில் நீங்கள் சிக்கிக்கொண்டால் குளிப்பதற்கு என்ன செய்வீர்கள்?
இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க வந்ததுதான் ‘‘வறண்ட குளியல்’’ முறை. இதற்கு ‘டிரை பாத் ஷவர் ஜெல்’ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த ஜெல்லை பயன்படுத்தி தண்ணீர் இல்லாமலேயே உடலை சுத்தம் செய்து குளித்தது போன்ற புத்துணர்ச்சியை பெற முடியும்.
இந்த புதுமையான ஜெல்லை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லுட்விக் மேரிஷான் என்ற மாணவர் கண்டுபிடித்துள்ளார். இவரது நண்பர் வெந்நீர் இல்லாவிட்டால் குளிக்கவே மாட்டாராம். அதனால் அவரது உடலில் இருந்து துர்நாற்றம் வீசுமாம். அதில் இருந்து தப்பிக்கவே மேரிஷான் இந்த ஜெல்லை கண்டுபிடித்தாராம்.
இந்த ஜெல் குளியல் முறை நோய் கிருமிகள் எதிர்ப்பு குளியலில் (ஆன்ட்டி பாக்டீரியல் வாஷ்) இருந்து வேறுபட்டது. பொதுவாக ஆன்ட்டி பாக்டீரியல் வாஷில் ஆல்கஹாலின் வாடை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஜெல்லில் ஆல்கஹால் வாடை இருக்காது. அதனால் இதனை எல்லோரும் பயன்படுத்தலாம்.
கடுங்குளிரில் பலரும் குளிப்பதற்கு தயங்குவார்கள். அவர்களுக்கு இந்த ஜெல் ஒரு வரப்பிரசாதம். உலகின் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. அங்குள்ள மக்கள் இந்த ஜெல்லை பயன்படுத்தி வறண்ட குளியல் முறையை பின்பற்றலாம்.
இந்த ஜெல்லை கண்டுபிடித்ததற்காக மாணவர் மேரிஷானுக்கு சர்வதேச மாணவர் கண்டுபிடிப்புகளுக்கான விருது கிடைத்துள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் விமான பயணிகள் பயன்படுத்துவதற்காக இந்த ஜெல் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. வருங்காலத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று உறுதியாக தெரிகிறது. அப்போது இந்த வறண்ட குளியல்தான் அனைவருக்கும் தீர்வாக அமையப்போகிறது.

No comments:

Post a Comment