Friday, 12 July 2013

தமிழில் வாதாடியதால் வழக்குகள் தள்ளுபடி செய்த ஐகோர்ட்

மதுரை:இரு வழக்குகளில், மனுதாரர்களின் வழக்கறிஞர், தமிழில் வாதிடுவேன் என்பதை, ஏற்க முடியாத நிலையில், மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கோவில்பட்டி, ஆயிஷா பானு தாக்கல் செய்த மனுவில், "கணவர் பக்கீர் மைதீன், சவுதி அரேபியாவில், கூலித்தொழிலாளியாக வேலைக்குச் சென்றார். அங்கு பாஸ்போர்ட்டை தொலைத்து, சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கிறார். அவரை மீட்டு, ஒப்படைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி அடக்கச்சி சுந்தரராஜன், "விளவங்கோடு மிடாலனில் வீடு கட்ட, வரைபட அனுமதி வழங்க, கருங்கல் ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார்.

மனுக்கள், நீதிபதி எஸ்.மணிக்குமார் முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்களின் வழக்கறிஞர் பகவத்சிங், "தமிழில் என் வாதத்தை முன்வைக்க விரும்புகிறேன்' என்றார்.

ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன, "பெஞ்ச்' ஆங்கிலத்தில் தான் வாதங்களை முன்வைக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளதாக, நீதிபதி கூறி, அந்நகலை பார்வையிடுமாறு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

"இல்லை... தமிழில் தான் வாதிடுவேன்' என, வழக்கறிஞர் தெரிவித்ததை தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்களில், வழக்காடு மொழியான ஆங்கிலத்தில் தான், வாதங்கள் இருக்க வேண்டும் என, அரசியலமைப்புச் சட்டம், தெளிவாக கூறுகிறது. சுப்ரீம் கோர்ட்டில், ஒரு வழக்கில், ராஜ்நாராயணன், "இந்தியில் தான் வாதிடுவேன்' என்றார். இதை நீதிபதிகள் சில நிமிடங்கள் செவி மடுத்தனர். அட்டார்னி ஜெனரல் தப்தாரி, எதிர்ப்புத் தெரிவித்தார். ராஜ்நாராயணனின் வாதம் புரியவில்லை என, நீதிபதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர்."இந்தியில் பேச அனுமதிக்க முடியாது. ராஜ்நாராயணன் ஆங்கிலத்தில் பேசலாம் அல்லது வழக்கறிஞர் மூலம் வாதிடலாம் அல்லது வாதங்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுக்கலாம். ஏனெனில், இக்கோர்ட்டின் வழக்காடு மொழி ஆங்கிலம். ராஜ்நாராயணன் சம்மதம் தெரிவிக்காவிடில், கோர்ட் இவ்வழக்கில் தலையிட முடியாது' என்றனர் நீதிபதிகள்.சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, இங்கும் பொருந்தும். அரசியலமைப்புச் சட்டமும் இதை வலியுறுத்துகிறது. இவ்வழக்கில், மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கையை, ஏற்க முடியாத நிலையில், கோர்ட் உள்ளது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
Click Here

No comments:

Post a Comment