Saturday, 18 May 2013

பீடி கொடுக்க மறுத்த மெக்கானிக் கொலை



சென்னை
சென்னையில் அரசு பஸ் மெக்கானிக், துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
துண்டிக்கப்பட்ட கை–கால்
சென்னை தண்டையார் பேட்டை ஐ.ஓ.சி. பஸ் நிலையத்தில் நேற்று காலை பயணிகள் சிலர், பஸ்சுக்காக காத்து நின்றனர். அப்போது அங்கு கிடந்த ஒரு பிளாஸ்டிக் பையில் துண்டிக்கப்பட்ட மனித கையும், காலும் இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஆர்.கே. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பிளாஸ்டிக் பையில் கிடந்த துண்டிக்கப்பட்ட கை, கால்களை மீட்டனர். பின்னர் அவற்றின் உடல் பகுதி கிடக்கிறதா? என அந்த பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சிதைக்கப்பட்ட உடல்
அப்போது பஸ் நிலையத்துக்கு பின்புறம் இருந்த யார்டு பகுதியில் ரத்த வெள்ளத்தில் ஒரு ஆண் உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் முகம் மற்றும் அடி வயிறு பகுதி சிதைக்கப்பட்டு இருந்ததால் அவர் யார்? என தெரியவில்லை. மர்ம நபர்கள் அவரை கொலை செய்து விட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க, கை–கால்களை வெட்டி எடுத்து, உடலை சிதைத்து உள்ளனர்.
அந்த உடலை மீட்ட போலீசார் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
கத்தியுடன் வாலிபர்
இது தொடர்பாக எண்ணூர் நெடுஞ்சாலையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரிகளுக்கு அருகே ரத்தக்கறை படிந்த கத்தியுடன் போதையில் ஒரு ஆசாமியை கண்டனர்.
சந்தேகத்தின் பேரில் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்டவர் பெயர் வாசுதேவன் (வயது 42) என்று தெரியவந்தது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:–
அரசு பஸ் மெக்கானிக்
சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(வயது 42). இவர், தியாகராய நகரில் உள்ள அரசு பஸ் டெப்போவில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவரது தங்கை வீடு, தண்டையார் பேட்டை கருமாரி அம்மன் நகரில் உள்ளது.
தங்கையை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் தண்டையார் பேட்டை வந்த வாசுதேவன், இரவில் அங்கேயே தங்கி விட்டார். ஏற்கனவே குடிபோதையில் இருந்த அவர், நள்ளிரவில் மீண்டும் மது குடிக்க விரும்பினார். எனவே மது பாட்டில்கள் வாங்க எண்ணூர் நெடுஞ்சாலையில் ஐ.ஓ.சி. பஸ் நிலையம் நோக்கி சாலையில் நடந்து சென்று இருக்கிறார்.
கழுத்தை அறுத்து கொலை
அப்போது பஸ் நிலையத்தின் உள் பகுதியில் கஞ்சா அடித்துக்கொண்டு இருந்த 6 பேர் கும்பல், வாசுதேவன் வருவதை பார்த்து அவரிடம் சென்று பீடி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், வாசுதேவனை இருட்டான பகுதிக்கு இழுத்து சென்று அவரது கழுத்தை தர தரவென அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்தனர்.
துண்டு துண்டாக வெட்டி
ஆனாலும் ஆத்திரம் அடங்காமல் அவரது உடலை அருகில் இருந்த யார்டு பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு மது அருந்தியபடியே வாசுதேவனின் வயிற்றை அறுத்தும், அவரது இடது கை மற்றும் வலது காலை துண்டு துண்டாக வெட்டி எடுத்தனர். அடையாளம் தெரியாமல் இருக்க அவரது முகத்தையும், மர்ம உறுப்பையும் சிதைத்தனர்.
பின்னர் உடலை மட்டும் அங்கேயே போட்டு விட்டு, உடலில் இருந்து வெட்டி எடுத்த கை, காலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு ஐ.ஓ.சி. பஸ் நிலையத்தில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
அடையாளம் தெரிந்தது எப்படி?
சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட நபர் போலீசாரிடம் கூறும்போது, நேற்று முன்தினம் இரவு ஐ.ஓ.சி. பஸ் நிலையம் அருகே நண்பர்களுடன் கஞ்சா அடித்து கொண்டு இருந்த போது அங்கு வந்த ஒரு நபருடன் ஏற்பட்ட தகராறில் அவரை துண்டு, துண்டாக வெட்டிக்கொலை செய்ததாக மட்டுமே கூறினார்.
ஆனால் அவர்கள் கொலை செய்தது யார்? என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் கூறினார். போலீசார் நடத்திய விசாரணையில்தான் கொலை செய்யப்பட்டவர் அரசு பஸ் மெக்கானிக் வாசுதேவன் என்பது தெரியவந்தது.
5 பேர் கைது
பிடிபட்டவர் கொடுத்த தகவலின் பேரில் அந்த பகுதியில் இருந்த மேலும் 4 பேரை பிடித்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் டில்லிபாபு (20), குமார் என்ற நிர்மல்குமார் (22), கார்த்தி என்ற கஞ்சா கார்த்திக் (19), ஜெகநாதன் (20) மற்றும் 18 வயது வாலிபர் ஒருவர் உள்பட அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான அனைவரும் ஐ.ஓ.சி. பகுதியை சேர்ந்தவர்கள். இந்த கொலையில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், பிடிபட்ட 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மனைவிக்கு தகவல்
கொலை செய்யப்பட்டது வாசுதேவன் தானா? என்பதை உறுதி செய்வதற்காக அவரது மனைவி தேன்மொழிக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர் வந்து கணவர் உடலை பார்த்து உறுதி செய்த பிறகுதான் வாசுதேவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment