போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்வதையோ, வாங்கி பயன்படுத்துவதையோ உலகின் பல நாடுகள் தடை செய்துள்ளன. எனினும், மருத்துவம் மற்றும் கேளிக்கைக்காக கஞ்சாவை பயன்படுத்தலாம் என்று சில நாடுகள் விதிவிலக்கு அளித்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் கொலோராடோ மாநிலத்தில் 2014 ஜனவரி 1-ம் தேதி முதல் சில்லரை கடைகளிலும், ஒரு சில மருந்து கடைகளிலும் அரசின் அங்கீகாரத்துடன் கஞ்சா விற்பனை செய்ய கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.
21 வயதை கடந்த ஆண், பெண் இருபாலரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அனுமதி பெற்ற இந்த கடைகளில் அதிகபட்சமாக 28 கிராம் கஞ்சா வாங்கிக் கொள்ளலாம் என கொலோராடோ மாநில அரசு அறிவித்தது. இதன் மூலம் கள்ளச் சந்தை கஞ்சா விற்பனையை ஒழித்துவிட முடியும் என அரசு கருதுகிறது.
மேலும், கஞ்சா கடைகளுக்கு அனுமதி அளிக்க வசூலிக்கப்பட்ட லைசன்ஸ் கட்டணம் மற்றும் விற்பனை வரியின் வாயிலாக அரசின் வருமானமும் பெருகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வகையில் முதல்கட்டமாக 348 சில்லரை கடைகளுக்கு கஞ்சா விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொலோராடோ மாநிலத்தில் தற்போது கடுமையான பனி பெய்து வருகிறது. குளிர் வாட்டி வதைப்பதால் கஞ்சா விற்பனை செய்யும் கடைகளின் வாசலில் புத்தாண்டு தினமான நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருந்ததை காண முடிந்தது.
கொலோராடோவையடுத்து வாஷிங்டன் மாநிலத்திலும் விரைவில் அரசின் அனுமதி பெற்ற கஞ்சா கடைகள் திறக்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment