Friday, 3 January 2014

அல்லா’ என்ற பெயரை பயன்படுத்திய கிறிஸ்தவபிரசார குழுவினரிடம் 321 பைபிள்கள் பறிமுதல்

 

கோலாலம்பூர்: மலேசியாவில் கிறிஸ்தவ மத பிரசாரம் செய்த குழுவினர், கடவுளுக்கு ‘அல்லா’ என்ற பெயரை பயன்படுத்தியதால் அவர்களிடம் இருந்து 321 பைபிள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மலேசியாவில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். புத்த மதத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் அங்கு சிறுபான்மையினராக உள்ளனர். மலேசிய அரசின் தேசிய மதமாக இஸ்லாம் உள்ளது. இந்நிலையில் இங்கு கிறிஸ்தவ மத பிரசாகர்கள் கடவுள் என்ற சொல்லுக்கு மாறாக ‘அல்லா’ என்ற சொல்லை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் அல்லா என்ற சொல் முஸ்லிம் மதத்தினருக்கும் மட்டுமான சொல். எனவே மற்ற மதத்தினர் அந்த சொல்லை பயன்படுத்த கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மலாய் மொழியில் வெளியாகும் கிறிஸ்தவ நாளிதழ் ஒன்று கடவுளை அல்லா என்று குறிப்பிட அனுமதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து முஸ்லிம் அறிஞர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர். பின்னர் அதிகாரிகள் ஆங்காங்கே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கிறிஸ்தவ மத பிரசாரகர்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றனர். கடவுளை அல்லா என்று குறிப்பிட்ட கிறிஸ்தவ மத பிரசார குழுவினரிடம் இருந்து 321 பைபிள் புத்தகங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 நிர்வாகிகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு ஜாமீனில் விடுவித்தனர்.

இதுகுறித்து கிறிஸ்தவ பைபிள் சொசைட்டி தலைவர் லீ மிங் சூன் கூறுகையில், ‘செலாங்கர் மாகாணத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லா என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்’ என்றார். துணை பிரதமர் முகைதீன் யாசீன் கூறுகையில், ‘சட்டத்துக்கு உட்பட்டுதான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தார். இதனால் மலேசியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment