கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை அடுத்த கனகமூட்லு பகுதியை சேர்ந்த துரைசாமி (50). நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி, ஓட்டல் நடத்தி வந்தார். இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை என்று, கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வீடு மற்றும் ஓட்டலை அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அப்போது திடீரென துரைசாமியின் மகன் மகேஷ், தனது தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
இதை போலீசார் தடுத்து நிறுத்தி, மகேஷிடம் இருந்து தீப்பெட்டியை பறித்தனர். தொடர்ந்து, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஓட்டல் மற்றும் வீட்டை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். பின்னர் அங்கு, இந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைத்தனர்.
No comments:
Post a Comment