Sunday, 19 January 2014

பாலியல் முறைகேடு புகார் : வாடிகன் குழுவிடம் ஐ.நா. விசாரணை

வாடிகனில் நிகழ்ந்த பாலியல் முறைகேடு புகார் தொடர்பாக வாடிகன் பிரதிநிதிகளிடம் ஐநா அமைப்பின் சிறுவர்கள் உரிமை கண்காணிப்பு அமைப்பு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை சுமார் 6 மணி நேரம் ஜெனிவாவில் நடந்தது.
சிறுவர்களுக்கு எதிராக பாலியல் முறைகேட்டில் பாதிரியார்கள் ஈடுபடுவதை முற்றிலுமாக ஒழிப்போம் என வாடிகன் உறுதி பூண்டுள்ளது. எந்த அளவுக்கு அது செயல்படுத்தப்படக்கூடியது என்பதை விளக்குமாறு இந்த விசாரணையில் கேள்வி எழுப்பப் பட்டது.
இதனிடையே, வாடிகன் தேவாலயத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ள இந்த பாலியல் முறைகேடு புகார்களால் கத்தோலிக்கர்கள் வெட்கித் தலைகுனியவேண்டும் என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் கண்டித்துள்ளார்.வாடிகனில் எந்தவித முறைகேடுகள் நடக்கவும் அனுமதிக்க முடியாது என உறுதி படத்தெரிவித்துள்ள பிரான்சிஸ், பாலியல் குற்றங்கள் பற்றி புலனாய்வு செய்யவும் அந்த குற்றங்களை தடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை அளிக்கவும் கடந்த மாதம் சிறப்பு கமிஷனை அமைத்து உத்தர விட்டார்.
வாடிகன் தரப்பில், அதன் முன்னாள் வழக்கறிஞர் மான்சைனர் சார்லஸ் சைக்லூனா பேசுகையில், என்ன செய்ய வேண்டும் என்பதை பேராலயம் புரிந்து கொண்டுள்ளது. என்ன நடந்துள்ளது என்பதும் வாடிகன் தலைமைக்கு தெரிந்துள்ளது. மாறுபட்ட வழிகளில் சில பிரச்சினைகளை கையாள வேண்டியுள்ளது என்று ஐநா கமிட்டியிடம் தெரிவித்தார்.
எனினும், சிறுவர்கள் உரிமை விஷயத்தில் ஈடுபாட்டுடன் நடப்போம் என வாடிகன் தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுவதாக ஐநா கமிட்டி தெரிவித்துள்ளது. தெளிவான நடவடிக்கைதான் அவசியம் என்று வாடிகன் பிரதிநிதிகளிடம் ஐநா கமிட்டி உறுப்பினர் சரா ஒவைடோ தெரிவித்தார்.

No comments:

Post a Comment