மதுரை:தமிழகத்தில் கொள்ளையர்களுக்கு, போலீசார் மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவுவதால், குற்றங்கள் அதிகரிக்கின்றன. பொருட்களை மீட்பதில் ஆர்வம் காட்டும் போலீசார், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் 'கோட்டை' விடுகின்றனர்.
சமீபகாலமாக, அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு; ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி; வீடுபுகுந்து திருட்டு; நகை, அடகு கடையில் கொள்ளை என தொடர்ந்து குற்றங்கள் நடக்கின்றன. சில வழக்குகளில், குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, பொருட்களை மீட்கின்றனர். பல வழக்குகள் 'விசாரணையிலேயே' இருக்கின்றன. ஏதாவது ஒரு வழக்கில் ஒருவர் கைதாகும் போது, 'நான், அந்த சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளேன்' என, கூறினால் தான் உண்டு.'குற்றவாளிகளை போலீசார் சிறையில் அடைத்தாலும், தண்டனை பெற்று தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை' என, சக போலீசாரே குற்றம்சாட்டுகின்றனர்.அவர்கள் கூறியதாவது: சில வழக்குகளில் கைரேகை, கொள்ளை நடந்த 'ஸ்டைலை' பார்த்து, 'இந்த குற்றவாளிதான் ஈடுபட்டிருக்க வேண்டும்' என, முடிவு செய்கிறோம்.
அவரை பிடிக்கும்போது, 'பொருளை கொடுத்துவிடு; 15 நாட்களுக்கு சிறையில் இரு; நாங்க எந்த தொந்தரவும் செய்யமாட்டோம்' என, உத்தரவாதம் கொடுத்து, பொருட்களை மீட்கின்றனர். 'ஒப்பந்தபடி' வழக்கு விசாரணையின்போது, வேண்டுமென்றே 'கோ(ஓ)ட்டை' விடுகின்றனர். இதை பயன்படுத்தி, குற்றவாளிகள், எளிதாக ஜாமினில் வருகின்றனர்; வழக்குகளிலும் விடுதலை ஆகின்றனர்.அதிகாரிகளும், 'எப்படியோ வழக்கு முடிந்தால் சரி; பொருட்களை மீட்டால் சரி' என, இந்த மறைமுக 'கூட்டணி'யை கண்டுகொள்வதில்லை. குற்றவாளிகள் அடுத்தடுத்த குற்றங்களில் ஈடுபட, இது காரணமாகிறது.
கொள்ளையின்போது, கொலையும் செய்கின்றனர். அல்லது அரிவாளால் தாக்கி, நிரந்தர ஊனத்தை ஏற்படுத்துகின்றனர். இவர்களை கைது செய்து, பொருட்களை மீட்டால்மட்டும் போதுமா? அதனால் இறந்தவர் குடும்பம் அல்லது காயம் அடைந்தவர்களுக்கு தீர்வு கிடைத்துவிடுமா?குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வகையில், உடனடி குற்றப்பத்திரிகை, ஜாமினில் வெளிவரமுடியாத அளவிற்கு சட்ட நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கையால் மட்டுமே, குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியும். இனியாவது 'திருடன் -- போலீஸ்' கண்ணாமூச்சிற்கு, அதிகாரிகள் முடிவு கட்ட வேண்டும்.
No comments:
Post a Comment