பெங்களூரில், குழந்தை பாக்கியம் கொடுப்பதாக கூறி 22 பெண்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி டாக்டர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
குழந்தை பாக்கியம் கொடுப்பதாக...
பெங்களூர் பசவேசுவரா நகரில் தனியாருக்கு சொந்தமான ஆஸ்பத்திரி உள்ளது. இதனை குருமூர்த்தி என்பவர் நடத்தி வந்தார். அவரே டாக்டராகவும் இருந்தார். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு, சிறந்த சிகிச்சை மூலம் குழந்தை பாக்கியம் கொடுப்பதாக குருமூர்த்தி கூறி வந்தார். இதனை நம்பிய ஏராளமான பெண்கள் அவரிடம் ரூ.4 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை பணம் கொடுத்து சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால் குருமூர்த்தி அளித்த சிகிச்சையின் மூலம் எந்த ஒரு பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. மேலும் அந்த பெண்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், குருமூர்த்தியால் பாதிக்கப்பட்ட பெண்கள், நேற்று அவரது ஆஸ்பத்திரி முன்பு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
போலி டாக்டருக்கு வலைவீச்சு
மேலும் காமாட்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் குருமூர்த்தி மீது புகாரும் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குருமூர்த்தி 10–ம் வகுப்பு வரை படித்துவிட்டு தான் எம்.பி.பி.எஸ். படித்து இருப்பதாக கூறி சிகிச்சை அளித்து வந்ததும், குழந்தை பாக்கியம் கொடுப்பதாக கூறி 22 பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவான போலி டாக்டர் குருமூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment