நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நவராஜ் (31). இவரது மனைவி சகுந்தலா (27) இருவரும் விசைத்தறி பட்டறை தொழிலாளிகள். குடிப்பழக்கத்திற்கு அடிமையான நவராஜ் அடிக்கடி தனது மனைவி சகுந்தலாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் தனது மனைவி சகுந்தலாவை அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இப்பிரச்சினையில் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி நிர்வாகி பொன்கதிரவன் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோதுதான் தனது மனைவி சகுந்தலாவை கருமுட்டை விற்க சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால்தான் சகுந்தலாவை நவராஜ் வெட்டியதாகவும் தெரிய வந்தது. இச்சம்பவத்தில் விசாரணைக்கு சென்ற நவராஜ் விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம், ஈரோடு, சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கருத்தரிப்பு மைய மருத்துவமனைகளுக்கு வரும் குழந்தை இல்லாத பெண்ணின் கருப்பையை சோதனை செய்யும் போது அவர்களில் பெரும்பாலானவர்களின் கருப்பையின் கருமுட்டை வலுவிழந்து காணப்படுவதை டாக்டர்கள் கண்டறிகின்றனர்.
இதுபோன்ற பெண்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்னும்போது அதற்கு மாற்று ஏற்பாடாக வேறு பெண்ணின் கருமுட்டையை வாங்கி அதை சம்மந்தப்பட்ட பெண்ணின் கருப்பையில் வைத்து கருவை வளர்க்கின்றனர். இதுபோன்று கருமுட்டையை விற்பனை செய்வதற்கென்றே ஏஜண்டுகள் பலர் செயல்பட்டு வருவது தற்போது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. விசைத்தறி தொழிலில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களை நாடும் ஏஜண்டுகள் கருமுட்டை விற்பனை செய்தால் யி25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலும் கிடைக்கும் என ஆசைவார்த்தைக்கூறி சம்மந்தப்பட்ட கருத்தரிப்பு மையங்களுக்கு அழைத்து செல்கின்றனர்.
கருமுட்டை விற்கும் பெண்ணுக்கு மாதவிடாய் வராமல் இருக்க முதலில் ஊசி போடுகின்றனர். பின்னர் அந்த பெண்ணை 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை மருத்துவமனையிலேயே தங்க வைத்து அவர்களிடம் இருந்து கருமுட்டையை எடுத்து அவற்றை கருமுட்டை இல்லாத பெண்ணின் கருப்பையில் வைத்து கர்ப்பம் அடைய செய்கின்றனர். இதுபோன்று கருமுட்டையை விற்கும் பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரை பணம் தரப்படுகிறது. 2 முதல் 3 மாதத்திற்கு ஒருமுறை ஈரோடு சுற்றுப்பகுதியை சேர்ந்த பல பெண்கள் கருமுட்டையை விற்று சம்பாதிக்கின்றனர்.
உள்ளூரில் மட்டுமின்றி சென்னை போன்ற வெளியூர்களுக்கும் இங்கிருந்து பெண்களை புரோக்கர்கள் அழைத்து செல்கின்றனர். இத்தொழிலில் ஈடுபடும் ஏஜண்டுகள் கணிசமான தொகையை சம்மந்தப்பட்ட கருத்தரிப்பு மையத்தில் இருந்து பெற்று கொள்கின்றனர். அடிக்கடி கருமுட்டை விற்பதால் உடல் நிலை பாதிக்கப்படுவதாக பெண்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில் கருமுட்டை விற்க மறுக்கும் பெண்களை கணவன் துன்புறுத்துவதால் குடும்ப உறவுகள் சீரழிகின்றன
No comments:
Post a Comment