Thursday, 2 January 2014

புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவு சாலை விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பலி 100 பேர் படுகாயம்

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். புத்தாண்டையொட்டி நகரில் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக இளைஞர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபடி வாகனங்களில் வலம் வந்தனர். சில இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். சில போலீசார் மெதுவாகச் செல்லும்படி அறிவுரை கூறினர்.

ஆனால் இளைஞர்கள் ஒவ்வொரு பைக்கிலும் 3 பேர், 4 பேர் வரை சென்றனர். ஒவ்வொருவர் கையிலும் மது பாட்டில்கள் இருந்தன. ஆபத்தான முறையில் வயிற்றிலும் மது பாட்டில்களை வைத்திருந்தனர். மேலும், வாகனங்களில் வேகமாக செல்வது, அதிக சத்தத்துடன் செல்வது, சாலைகளில் எதிரே வருகிறவர்களை பயமுறுத்தும் வகையில் தாறுமாறாக செல்வது, பொறி பறக்கவேண்டும் என்பதற்காக பைக் ஸ்டாண்டை தரையில் உரசி தீப்பொறியுடன் ஆபத்தான நிலையில் செல்வது போன்ற சாகசங்களை செய்தனர்.

இதனால், நள்ளிரவில் கோயில்கள், சர்ச்சுகளுக்கு செல்பவர்கள் மிகவும் வேதனைப்பட்டனர். அவர்கள் பயந்தபடியே வாகனங்களிலும், சாலைகளில் நடந்தும் செல்வதை காணமுடிந்தது. இதனால்தான் சென்னையில் நேற்று விபத்துகள் அதிகரித்தன. மேற்கு சைதாப்பேட்டை சுப்பிரமணியசாலையில் வசித்தவர் ராம்பிரசாத் (19). இவர், தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், தனது நண்பர் சரவணனுடன் புத்தாண்டு கொண்டாட மெரினா கடற்கரைக்குச் சென்றார். பின் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காந்தி மண்டபம் எதிரே சென்றபோது முன்னால் சென்ற லாரியின் பின் சக்கரத்தில் சிக்கினர். அதில் ராம்பிரசாத் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். அவரது நண்பர் லேசான காயத்துடன் தப்பினார்.

குன்றத்தூர் பழந்தண்டலம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (17). இவர் புத்தாண்டு கேக் வாங்குவதற்காக நண்பர்கள் 2 பேரை ஏற்றிக் கொண்டு பைக்கில் சென்றார். குன்றத்தூரில் தனியார் கல்லூரி அருகே, எதிரே வந்த லாரி மோதி அருண்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். நண்பர்கள் 2 பேரும் லேசான காயத்துடன் தப்பினர். விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டது.

கொடைக்கானலைச் சேர்ந்தவர் பிரகாஷ் (22). இவர், செனனையில் தங்கி பி.டெக் படித்து வந்தார். இவர் நள்ளிரவு 12.20 மணிக்கு அம்பாள் நகரில் 100 அடி சாலையில் பைக்கில் சென்றபோது, எதிரே இருந்த ஸ்பீட் பிரேக்கரை கவனிக்கவில்லை. அருகில் வந்தபோதுதான் பார்த்தார். இதனால் திடீர் பிரேக் அடித்தார். அப்போது பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் ராமநாராயண் சிங் (42). ஓட்டல் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கரூர் அருகேயுள்ள குளித்தலையை சேர்ந்தவர் தண்டபாணி (26). அம்பத்தூரில் உள்ள தனியார் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவருடன் வேலை பார்க்கும் அலாவுதீன், அசார் ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மறைமலை நகரில் புத்தாண்டு கொண்டாடினார். நேற்று அதிகாலை 4 மணிக்கு 3 பேரும் தாம்பரம் பைபாஸ் சாலை வழியாக அம்பத்தூருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். தாம்பரம் கல்குவாரி அருகே வந்தபோது, பைக் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த தண்டபாணி சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 2 பேரும் காயமடைந்தனர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கிறார்கள். ஆழ்வார்திருநகரில் சில இளைஞர்கள் குடித்து விட்டு தகராறு செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த காண்ட்ராக்டர் முனுசாமியை தாக்கினர். பெண்களையும் வழிமறித்து கிண்டல் செய்தனர். போலீசார் விரைந்து சென்று 2 வாலிபர்களை கைது செய்தனர்.

மெரினா கடற்கரையில் கூட்டத்தைப் பார்த்ததும் போலீஸ் குதிரை மிரண்டு ஓடியது. அதில் ஒரு பெண் மற்றும் ஆண் போலீசார் காயமடைந்தனர். சிலர் சாலை தடுப்புகள் கூட தெரியாமல் மோதினர். சிலர் காரில் வேகமாக வந்து, நின்று கொண்டிருந்த காரில் மோதினர். இவ்வாறு நள்ளிரவு நடந்த சாலை விபத்துகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

அதில் அரசு பொது மருத்துவமனையில் 18 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 11 பேரும், கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 70 பேரும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். 10 பேர் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சாலை விபத்துகள் அதிக அளவில் நடந்துள்ளது. கடந்த ஆண்டு விபத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார். ஆனால் இந்த ஆண்டு 5 பேர் இறந்துள்ளனர். 100 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் மது. இதனால், புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment