Friday, 3 January 2014

கெஜ்ரிவால் சொகுசு பங்களாவில் குடியேறுகிறார்

சொகுசு வாழ்க்கைக்கு கெஜ்ரிவாலும் பலி: 9000 சதுரடியில் 10 படுக்கை அறை கொண்ட இரட்டை பங்களாவில் குடியேறுகிறார்
அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, அரசு செலவினங்களில் சிக்கனம், அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை உள்ளிட்ட முற்போக்கு முழக்கங்களுடன் ‘ஆம் ஆத்மி’ கட்சியை தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால், முதல் மந்திரி ஆனதும் 9000 சதுரடியில் 10 படுக்கை அறை கொண்ட இரட்டை பங்களாவில் குடியேறும் தகவல் அவரை நம்பி வாக்களித்த டெல்லி வாசிகளிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

இது வரை தனது டெல்லி நண்பர் வாடகை இன்றி வழங்கிய சிறிய பங்களாவிலும், அரசு ஊழியரான அவரது மனைவிக்கு காசியாபாத் பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குடியிருப்பிலும் தங்கியிருந்த கெஜ்ரிவால், தற்போது முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தின் வீடு அமைந்துள்ள பகவான் தாஸ் சாலையில் குடியேறுகிறார்.

இதற்காக, கதவு எண் 7/6 மற்றும் 7/7 என அடுத்தடுத்து இரண்டு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 பங்களாக்களும் 9 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 6 ஆயிரம் சதுரடி கட்டிடங்கள் கொண்டதாகும். இவை இரண்டிலும் 10 படுக்கை அறைகள், பசுமையான புல்வெளி மற்றும் பணியாளர்களுக்கான தனி வீடுகளுடன் அனைத்து நவீன வசதிகள் கொண்டது என தெரிய வந்துள்ளது.

டெல்லி தலைமை செயலாளர் கேட்டுக் கொண்டதையடுத்து, இந்த 2 பங்களாக்களின் சாவிகளும் நேற்று முன்தினம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பங்களாக்களுக்கும் இடையில் உள்ள மதில் சுவரை இடித்து விட்டு, வர்ணப்பூச்சு உள்ளிட்ட இதர பணிகள் முடிந்த பின்னர் இந்த புதிய வீட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் குடியேறுகிறார்.

இந்த பங்களா சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மத்திய மந்திரிகள் ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பங்களாவை விட பெரியது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கதவு எண் 7/6-ஐ தனது இல்லமாகவும், 7/7-ஐ முதல் மந்திரியின் அலுவலகம் ஆகவும் கெஜ்ரிவால் பயன்படுத்துவார் என கூறப்படுகிறது. தனது பெற்றோர், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் விரைவில் இந்த புதிய வீட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் குடியேறுகிறார்.

No comments:

Post a Comment