பென்னாகரம் : ஒகேனக்கலில் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் மரக்கிளையை பிடித்தபடி விடிய, விடிய போராடி வருகின்றனர். சூறாவளி வெள்ளம், இருள், மழையால் அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. தர்மபுரி மாவட்டம் பந்தனஅள்ளி செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பன் (எ) துரைராஜ். உறவினர் ஒருவரது இறுதி சடங்குக்காக நேற்று ஒகேனக்கல் வந்தார். நேற்று மாலை 3 மணிக்கு முதலை பண்ணை அருகே இறுதி சடங்கை முடித்துவிட்டு, ஆற்றில் குளித்தனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மாதப்பன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். மாமரத்து கடவு பரிசல் துறை அருகே ஒரு மரக் கிளை பிடித்து மரத்தின் மீது ஏறினார். பின்னர் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். அங்கு வந்த அதிகாரிகளின் ஆலோசனைப்படி பரிசல் ஓட்டிகள் ராமகிருஷ்ணன், முத்து, சகாதேவன் ஆகியோர் மாதப்பனை மீட்க பரிசலை ஓட்டி சென்றனர். தண்ணீரின் வேகத் தில் பரிசல் இழுத்துச்செல்லப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களும் மரத்தில் ஏறி தப்பினர்.
இவர்கள் நால்வரை யும் மீட்க அனுபவம் வாய்ந்த பரிசல் ஓட்டிகள் 3 பேர் மற்றொரு பரிசலில் சென்றனர். ஆனால் நீரின் வேகத்தில் ஈடுகொடுக்க முடியாமல் கரை திரும்பினர். இதனால் மீட்பு பணி முடங்கியது. தகவலறிந்த கலெக்டர் விவேகானந்தன், போலீஸ் எஸ்பி அஸ்ராகர்க் ஆகியோர் நேற்று மாலை சம்பவ இடத்துக்கு வந்தனர். இவர்கள் மீட்பு பணி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தனர்.
இதற்கிடையில் நேரம் செல்ல செல்ல இருள் சூழ்ந்தது. அதோடு லேசான மழை தூறலும் விழுந்தது. இதனால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.ஜெனரேட்டர் மூலம் மின் விளக்குகள் எரிய விடப்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு தைரியம் அளிக்கும் விதமாக மைக் மூலம் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பேசி வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கிய வர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்பதற்கான நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment