Friday, 16 August 2013

மோடிக்கு விசா வழங்குவதற்கு அமெரிக்காவின் உயர் அதிகாரி கேத்ரினா லான்டோஸ் கடும் எதிர்ப்பு

உயர் அதிகாரியின் எதிர்ப்பால் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்குவதில் சிக்கல்

குஜராத்தில் 2002-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரம் காரணமாக, முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா கொடுக்க மறுத்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், மோடிக்கு விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதேசமயம், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதால், அமெரிக்கா தன் நிலையை மாற்ற தீர்மானித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் பேட்டி அளித்த அமெரிக்க அரசுத்துறை செய்தி தொடர்பாளர், விசா கேட்டு மோடி விண்ணப்பித்தால் பரிசீலனை செய்வோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், மோடிக்கு விசா வழங்குவதற்கு அமெரிக்காவின் உயர் அதிகாரி கேத்ரினா லான்டோஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையத்தின் துணைத் தலைவியான கேத்ரினா லான்டோஸ் இதுபற்றி மேலும் கூறுகையில், “2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தில் மோடியின் பங்களிப்பு குறித்து மிக தீவிரமான சந்தேகங்கள் உள்ளன. எனவே, அவருக்கு அமெரிக்க அரசு விசா வழங்கக்கூடாது” என்று தெரிவித்தார்.

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக, மோடி தேர்வு செய்வதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று கேட்டதற்கு, “இந்தியாவின் அடுத்த தலைவராக யார் வர வேண்டும் என்று மற்ற நாடுகள் அல்லது தனிநபர்கள் கூறக்கூடாது. இந்திய மக்கள் மிக கவனமாக தங்கள் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும்” என்றார் கேத்ரினா.

மதசுதந்திர மீறல்கள் தொடர்பாக ஆய்வு செய்து அதிபரிடம் அறிக்கை அளிக்கும், இந்த உயர் அதிகாரி, மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் அவருக்கு விசா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment