
திண்டுக்கல்: உணவில், மயக்க மருந்து கொடுத்து, ரயிலில், பெண் பயணியிடம், நகையை கொள்ளையடித்த வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர் முனியாண்டி,61; ஓய்வு பெற்ற பொறியாளர்.இவரது மனைவி கலைச்செல்வி,52. இருவரும், புனேவில் உள்ள மகன் நவீனை பார்க்க சென்றனர். மும்பை-நாகர்கோவில் ரயிலில் ஊருக்கு திரும்பினர். 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், இவர்கள் பயணம் செய்த பெட்டியில் ஏறியுள்ளார்; அந்த வாலிபர் பிஸ்கட், தண்ணீர் கொடுத்துள்ளார்.
இதை வாங்க, இருவரும் மறுத்தனர்; அதேசமயம், மதியம், சாப்பிடுவதற்காக, பார்சல் சாப்பாட்டை வாங்கி,இருக்கைக்கு கீழே வைத்தனர்.நேற்று முன்தினம், பகல், 1:30 மணிக்கு, ரயில், சேலம் அருகே வந்தபோது, கலைசெல்வி உணவை எடுத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார்.
ரயில், கரூர் வந்த போது விழித்த முனியாண்டி, மனைவியை எழுப்பியுள்ளார். அவர், மயக்கநிலையில் இருந்ததால் எழவில்லை. அவர் கழுத்தில் அணிந்திருந்த, 11 சவரன் நகைகள் மாயமானதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில், ரயில் திண்டுக்கல் வந்தது; ரயில்வே போலீசில் முனியாண்டி புகார் கொடுத்தார். கலைச்செல்வி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கூ றியதாவது: கலைச்செல்வி சாப்பிட்ட உணவில், மயக்க மருந்து இருப்பதாக, டாக்டர்கள் கூறினர். "ஸ்பிரே'அடித்து இருந்தால், "ஏ.சி., கோச்' என்பதால், அந்த பெட்டியில் உள்ள அனைவரும் மயங்கி இருக்க வேண்டும்; ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஈரோட்டில் இறங்குவேன் எனக் கூறிய வாலிபர், சேலத்தில் இறங்கியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சேலம் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள சி.சி.டி.வி.,யை கண்காணித்து விசாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment