
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களுருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகியுள்ளதைப் போலவே, அங்கு பணிபுரியும் இளைய சமுதாயத்தினரிடம் திருமணம் செய்துகொள்ளாமல் வசதி கருதி ஆண்- பெண் சேர்ந்து வாழும் கலாச்சாரம் பரவலாகக் காணப்படுகின்றது.
இவ்வாறான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுபவர்கள் பெரும்பாலும் 25-35 வயதுக்குட்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். பொருளாதார வசதி மற்றும் சமூகப் பாதுகாப்பு கருதி இத்தகைய வாழ்க்கை முறைகளுக்கு இரு சாராரும் உட்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர்களாகவே காணப்படுகின்றனர். தங்கள் ஊரைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வதை அவர்கள் வசதியாகக் கருதுகின்றனர். ஆயினும், சிறிது காலம் கழித்து திருமண பந்தம் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படும்போது, ஆண் திருமணத்திற்கு மறுப்பதால் இத்தகைய சேர்ந்து வாழும் உறவுகள் முறியத் துவங்குகின்றன.
கடந்த 2011-12-ம் ஆண்டில் 30 என்ற அளவில் இருந்த இத்தகைய பிரிவுகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 42 ஆகக் காணப்படுகின்றது. இது வரும் காலத்தில் இரட்டிப்பாகலாம் என்று கர்நாடகாவின் காவல்துறையுடன் இணைந்து செயல்படும் ஒரு ஆலோசனை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தெரிவிக்கின்றார். வாடகைக்கு வீடு எடுக்கும்போது தம்பதியர் என்றே இருவரும் கூறுகின்றனர். அவர்களின் நடவடிக்கைகளும் அதுபோலவே தொடர்கின்றது.
இதுபோன்ற பிரிவுகள் ஏற்பட்ட பின்னரே, காவல்துறைக்குத் தகவல் தரப்படுகின்றது என்று இம்மையத்தின் மற்றொரு ஆலோசனை மையத்தின் உறுப்பினர் கூறுகிறார். மூன்று குழந்தைகள் பெற்ற பின்பும் சொத்துரிமைக்காக திருமண பந்தம் இல்லாமல் வாழ்க்கை நடத்தும் தம்பதியர் பற்றிய விபரமும் இங்கு தெரிவிக்கப்பட்டது. இளைய சமுதாயத்தினர் இதுபோன்ற வாழ்க்கைமுறைகளில் உள்ள அபாயங்களை உணர வேண்டும் .சட்டப்படி இத்தகைய உறவுமுறை அனுமதிக்கப்படாததால் அவர்கள் தங்களது உறவு குறித்து கவனமுடன் இருக்க நேரிடுகின்றது.
இத்தகைய பிரிவுகளில் வரும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஆண் திருமணத்திற்கு மறுப்பதுதான் என்று ஆலோசனை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தெரிவிக்கின்றார்.
No comments:
Post a Comment