புதுடில்லி: "அமெரிக்க அரசு ஒத்துழைக்காததால், பேஸ்புக், கூகுள் உட்பட, 13 இணையதளங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை; இதனால், விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என, டில்லி கோர்ட் தெரிவித்துள்ளது.
ஆபாச காட்சிகள் மற்றும் தகவல்களை இளைஞர்களிடையே பரப்புவது, கிரிமினல் சதித்திட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ், பேஸ்புக், கூகுள், யூ டியூப், யாகூ போன்ற, 13 இணையதளங்களை தடை செய்யக் கோரி, டில்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இது குறித்து, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட், ஜே தாரேஜா கூறியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த இந்த இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு, "சுதந்திரமான கருத்துகளை தெரிவிக்கும் உரிமையில் தலையிட தாங்கள் தயாராக இல்லை' என்ற பதில் கிடைத்ததால், அந்த இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்த ஆண்டின் துவக்கத்திலும், புதிய சம்மன்கள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும், அவற்றின் மீதும், அமெரிக்க உள்துறை பதில் நடவடிக்கை எடுக்காததால், வழக்கின் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே, இவ்விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு, நீதிபதி கூறினார். அமெரிக்காவின், 13 இணையதளங்கள் உட்பட, 21 இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment