
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2014) தேர்தல் நடத்தப்படும் முன்பு அயோத்தி விவகாரத்தை கையில் எடுத்து, மீண்டும் ஒரு எழுச்சியை ஏற்படுத்த விசுவ இந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி ‘‘84 கோசி பரிகிராமா’ எனும் யாத்திரையை வரும் 25–ந் தேதி தொடங்கி நடத்த விசுவ இந்து பரிஷத் தலைவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த யாத்திரை பைசாபாத், அம்பேத்கர் நகர், கோண்டா, பஸ்தி, பக்ரைச் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக நடத்தப்படுகிறது. சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடத்தபடும் இந்த யாத்திரை அயோத்தியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 13–ந் தேதி முடிவடையும்.
விசுவ இந்து பரிஷத்தின் இந்த யாத்திரையில் உத்தர பிரதேசத்தில் இருந்து மட்டுமல்லாமல் நாடெங்கும் பல மாநிலங்களில் இருந்தும் பரிஷத் நிர்வாகள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் யாத்திரையில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் விசுவ இந்து பரிஷத்தின் யாத்திரை நடந்தால் உத்தர பிரதேசத்தில் மத கலவரம் ஏற்படும் என்று உளவுத்துறை எச்சரித்தது. யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ள வழியில் பல இடங்களில் மத மோதல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் உளவுத்துறை தகவல் அளித்தது.
இதையடுத்து விசுவ இந்து பரிஷத் அயோத்தி நோக்கி நடத்தும் யாத்திரைக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச அரசை மத்திய உள்துறை கேட்டுக் கொண்டது. உளவுத்துறை எச்சரிக்கை அறிக்கையையும் உத்தரபிரதேச அரசின் பார்வைக்கு மத்திய உள்துறை அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்–மந்திரி அகிலேஷ் யாதவை விசுவ இந்து பரிஷத் தலைவர்கள் அசோக் சிங்கால், ராம்விலாஸ் வேதாந்தி சந்தித்து பேசினார்கள். அயோத்தி நோக்கிய யாத்திரைக்கு அனுமதி கேட்டனர். அதோடு யாத்திரைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதற்கு உத்தரபிர தேசத்தில் உள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விசுவ இந்து பரிஷத்தின் எந்த திட்டத்தையும் ஏற்க இயலாது என்று அறிவித்தனர்.
இதையடுத்து விசுவ இந்து பரிஷத்தின் அயோத்தி யாத்திரைக்கு தடை விதித்து முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார். இந்த தடையை மீறி யாத்திரை செல்ல முயல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment