திண்டுக்கல் காளிமுத்துபிள்ளை சந்து தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு வேலுமணி என்ற மகனும், தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
திண்டுக்கல் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 10–க்கும் மேற்பட்ட இடங்களில் கோவிந்தராஜ் ரிலாக்ஸ் கார்னர் என்ற பெயரில் டீக்கடை மற்றும் உணவகங்கள் நடத்தி வந்தார். கோவிந்தராஜ் நேற்று காலையில் வேடசந்தூர் அருகே உள்ள பஞ்சம்பட்டி பிரிவு பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்டவர் பிரபல தொழிலதிபர் என்பதால் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கொன்றவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிந்தராஜ் அணிந்திருந்த தங்கமோதிரம், வாட்ச், வெள்ளி அரைஞாண் ஆகியவை அப்படியே இருந்தது. செல்போன் அந்த இடத்திலேயே கிடந்தது. இதனால் பணத்திற்காக கொலை நடக்கவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். நேற்று காலை தந்தை கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த வேலுமணி தனது காரில் வேடசந்தூருக்கு விரைந்து வந்தார்.
அப்போது அவர் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். வேலுமணி அங்கு வருவதற்கு பயன்படுத்திய காரில் ஒருசில இடங்களில் ரத்தக்கறை படிந்து இருந்ததை போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் போலீசாருக்கு வேலுமணி மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் வேலுமணியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கோவிந்தராஜின் செல்போனை கைப்பற்றி போலீசார் அதில் சோதனை செய்தபோது கடைசியாக வேலுமணி கோவிந்தராஜை நேற்று முன்தினம் இரவு பல தடவை போனில் பேசியதை கண்டுபிடித்தனர்.
இதனால் வேலுமணி மீது போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. பின்னர் போலீசார் வேலுமணி மற்றும் அவரது கார் டிரைவர் ஆகிய 2 பேரிடமும் நேற்று இரவு விடிய, விடிய தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வேலுமணி சொத்துக்கு ஆசைப்பட்டு நண்பர்களுடன் சேர்ந்து தந்தை கோவிந்தராஜை கடத்தி கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:–
திண்டுக்கல் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நடத்தி வந்த தொழில் மூலம் கோவிந்தராஜூக்கு லட்சக்கணக்கில் பணம் வந்துள்ளது. இதனால் அவருக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. இவரது மகன் வேலுமணி. திருமணமானவர். இவருடைய நடத்தை சரியில்லாததால் அவ்வப்போது தந்தை – மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் கோவிந்தராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகனிடம் எனது சொத்துக்களை உனக்கு தரமாட்டேன். உன்னுடைய நடத்தை சரியில்லை. நீ என்னுடைய பேச்சை கேட்க மறுக்கிறாய். எனவே எனது சொத்துக்கள் அனைத்தையும் ஆசிரமத்திற்கோ அல்லது உனது அக்காவிற்கோ எழுதி வைத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
இதனால் வேலுமணிக்கு தனது தந்தை மீது மிகுந்த கோபம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்கள் அனைத்தையும் அக்காள் பேரில் எழுதுவதற்கு முன்பாக தந்தையை கொன்று விட வேண்டும் என்று வேலுமணி திட்டம் தீட்டியுள்ளார்.
இதுகுறித்து வேலுமணி தனது கார் டிரைவர் ஜெயக்குமார், நண்பர்கள் மணிகண்டன், திருப்பதி ஆகியோரிடம் கூறியுள்ளார். அவர்களும் இது நல்ல ஆலோசனை. உனது தந்தையை கொன்று விடலாம் என வேலுமணிக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கோவிந்தராஜ் பஸ்நிலையத்தில் உள்ள தனது டீக்கடையில் இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த வேலுமணி தந்தையிடம் நான், உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்னுடன் வாருங்கள் என அழைத்தார். இதையடுத்து கோவிந்தராஜ் மகனுடன் காரில் சென்றார். அப்போது காரில் டிரைவர் ஜெயக்குமார், நண்பர் மணிகண்டன் ஆகியோர் இருந்துள்ளனர்.
கார் வேடசந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வேலுமணி தனது தந்தையின் சொத்தையெல்லாம் எனது பேரில் தான் எழுதி வைக்க வேண்டும் என தகராறு செய்தார்.
இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வேலுமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தை கோவிந்தராஜின் கழுத்தை அறுத்தார். இதற்கு உடந்தையாக கார் டிரைவர் ஜெயக்குமார், நண்பர் மணிகண்டன் ஆகியோரும் இருந்துள்ளனர். கழுத்து அறுக்கப்பட்டு கோவிந்தராஜ் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
கொலையை மறைப்பதற்காக அவர்கள் 3 பேரும் வேடசந்தூர் அருகே உள்ள பஞ்சம்பட்டி பிரிவு காட்டு பகுதியில் பிணத்தை வீசிவிட்டு தப்பி சென்று விட்டனர். மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வேலுமணி மற்றும் கார் டிரைவர் ஜெயக்குமார், நண்பர்கள் மணிகண்டன், திருப்பதி ஆகியோரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி என்பவரை காரில் படிந்த ரத்தக்கறையை அழிப்பதற்காக வேலுமணி அவரை பயன்படுத்தியுள்ளார்.
சொத்துக்காக தந்தையையே மகன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment