சண்டிகர்: அரியானாவில், திருமண நிகழ்ச்சிகளின் போது, கிராமத்தினருக்கு வழங்கப்படும் உணவு விருந்துக்கு, "காப் பஞ்சாயத்து' தடை விதித்துள்ளது. இதன்மூலம், பெண் வீட்டாரின் சுமை குறைக்கப்பட்டுள்ளது.
அரியானா மாநிலம், பிவானி மாட்டத்தில் உள்ள, 12 கிராமங்களில், "காப் பஞ்சாயத்து' ஜாதி கவுன்சில் முறை, அமலில் உள்ளது. இந்த பஞ்சாயத்தில், 12 கிராமங்களை சேர்ந்த, முக்கிய நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த பஞ்சாயத்துக்கள் எடுக்கும் முடிவுகள், 12 கிராமங்களைச் சேர்ந்தவர்களையும் கட்டுப்படுத்தும். பிவானி மாவட்டத்தில், காப் பஞ்சாயத்து முறை அமலில் உள்ள, 12 கிராமங்களிலும், "காஜ்' எனும் சடங்கு, வழக்கத்தில் உள்ளது. இதன்படி, வீட்டில் வயது முதிர்ந்த பெரியவர் யாரேனும் இயற்கை மரணம் எய்தினால், அவ்வீட்டார், கிராம மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். நீண்ட காலமாக பின்பற்றப்படும், இந்த காஜ் சடங்கை ரத்து செய்வது என, காப் பஞ்சாயத்து, சமீபத்தில் முடிவு செய்தது. அதே போல், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போது, நிகழ்ச்சியில் பங்கேற்கும் கிராமத்தினர் அனைவருக்கும், பெண் வீட்டார், கட்டாயமாக மதிய உணவு அல்லது இரவு உணவு வழங்க வேண்டும். இதனால், பெண் வீட்டார் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும், கூடுதல் செலவுகளால், மிகுந்த மன உளைச்சல்களுக்கு ஆளாவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, திருமணங்களின் போது, கிராமத்தினருக்கு வழங்கப்படும் உணவு விருந்துக்கும், காப் பஞ்சாயத்து தடை விதித்தது. இந்தத் தடையால், திருமண நிகழ்ச்சிகளின் போது, சாப்பாட்டுக்காக பெரும் கூட்டம் கூடுவது, தவிர்க்கப்படுவதோடு, செலவும் குறையும் என்பதால், கிராமவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment