"
போதிய விழிப்புணர்வு மற்றும் சத்துக்குறைபாட்டினால், பிரசவத்திற்கு பின், 40 சதவீத தாய்மார்கள் இறக்கின்றனர்' என, மகப்பேறு மருத்துவர் அமைப்பான "பாக்ஜி' தெரிவித்து உள்ளது.
மகப்பேறு மருத்துவர் அமைப்பான, "பாக்ஜி', சமீபத்தில் நடத்திய ஆய்வில், 2 கோடியே
70 லட்சம் பெண்களுக்கு, 27 ஆயிரம் மகப்பேறு மருத்துவர்களே உள்ளனர் என்ற புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. பெண் சிசுக்கொலை தமிழகத்தில், 1 லட்சத்திற்கு, 97 பேர் என்ற விகிதத்தில், இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனால், மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு, எளிய முறையில் பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சி வழங்க, மருத்துவர் அமைப்பு திட்டமிட்டது.அதன்படி திருச்சியில், பேறுகாலத்திற்கு முன், பேறுகாலத்திற்கு பின், தாய்மார்களுக்கான சிகிச்சை மேற்கொள்ளும் முறை குறித்தும், செவிலியர்களுக்கு, இரண்டு நாட்கள் பயிற்சி கருத்தரங்கு துவக்கியது.இதில், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பயிற்சி அளித்தனர். கருத்தரங்கில், மருத்துவர் ஹேமா திவாகர் பேசியதாவது:
மகப்பேறு மருத்துவர்கள் அமைப்பின் முக்கிய நோக்கமே, பெண் சிசுக்கொலை தடுப்பு மற்றும் ஆரோக்கியமான சிக்கலில்லா பிரசவத்தை மேற்கொள்வதே. இதற்கான விழிப்புணர்வை, தமிழகத்தில் ஏற்படுத்த, பல்வேறு கருத்தரங்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
கிராமப்புறங்களில், போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், சத்துக்குறைபாடு உள்ளிட்ட காரணங்களாலும், 40 சதவீத தாய்மார்கள் இறக்கின்றனர். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக, பிறக்கும் குழந்தைகள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.இதை தாய்மார்களுக்கு அறிவுறுத்த, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக அரசின் பல்வேறு மருத்துவ உதவி திட்டங்களால், பிரசவக்கால இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. இதை மேலும் குறைத்து. பெண் சிசுக்கொலை இல்லாத மாநிலமாக்குவதே, அமைப்பின் நோக்கம்.இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment