Friday, 16 August 2013

மோடியை அழைப்பதா?: இங்கிலாந்தில் வாழும் இந்திய முஸ்லிம்கள் அதிருப்தி

மோடியை அழைப்பதா?: இங்கிலாந்தில் வாழும் இந்திய முஸ்லிம்கள் அதிருப்தி தெரிவித்து மந்திரிகளுக்கு கடிதம்
பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து எதிர்க்கட்சியின் இந்திய தொழிலாளர் நண்பர்கள் குழு தலைவர் பேரி கார்டினர் எம்.பி. கடந்த வாரம் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், 'நவீன இந்தியாவின் எதிர்காலம்' என்ற தலைப்பில் பாராளுமன்றத்தில் உரையாற்ற வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

இதேபோல் கன்சர்வேட்டிவ் கட்சியின் இந்திய நண்பர்கள் குழு தலைவர் சைலேஷ் வாரா எம்.பி.யும் தனியாக ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

2002-ல் நடந்த குஜராத் கலவரங்களுக்கு பிறகு அமெரிக்காவைப் போன்று இங்கிலாந்து அரசும் மோடியை புறக்கணித்து வந்த நிலையில், இப்போது இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசுவதற்காக மோடிக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு, அங்கு வாழும் இந்திய முஸ்லிம்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இந்திய முஸ்லிம்கள் கூட்டமைப்பு இங்கிலாந்து மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இங்கிலாந்தில் வாழும் இந்திய முஸ்லிம்கள் கூட்டமைப்பின் தலைவர் முனாப் ஜீனா, இங்கிலாந்து வெளியுறவு மந்திரி வில்லியம் ஹாக், உள்துறை மந்திரி தெரேசா மே, ஆளும் கண்சர்வேட்டிவ் கட்சி தலைவர்கள் கிராண்ட் ஷாப்ஸ், ஆண்ட்ரு ஃபெல்ட்மென், எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் எல் மிலிபேண்ட் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

மோடிக்கு அழைப்பு விடுத்த தொழிலாளர் கட்சி எம்.பி. பேரி கார்டினர் இங்கிலாந்தில் பா.ஜ.க.வுக்காக பிரசாரம் செய்து வருவது, நாங்கள் அறியாததல்ல.

பிரெண்ட் நார்த் தொகுதி எம்.பி. தேர்தலில் பேரி கார்டினர் போட்டியிட்டபோது அவரது தேர்தல் பிரசார இணையதளத்தில் அவரை புகழ்ந்து மோடி அளித்த சான்றிதழை வெட்கமின்றி விளம்பரப் படுத்தியிருந்தார்.

அந்த சான்றிதழில் இங்கிலாந்தில் பேரி கார்டினரை விட உயர்ந்த நண்பர் யாரும் குஜராத்துக்கு இல்லை என்று மோடி குறிப்பிட்டிருந்தார்.

நமது காலத்தின் நீரோவும், ஹிட்லருமாக உள்ள ஒருவரை இங்கிலாந்து எம்.பி.க்கள் ஆதரிக்கும் போக்கினை நீங்கள் கண்டிக்க வேண்டும்.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேச அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அறிந்து நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம்.

இது தொடர்பான முடிவினை நீங்கள் மறுசீராய்வு செய்ய வேண்டும்.

இந்த முடிவு இந்தியாவில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும். இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றிலும் அவமானகரமான களங்கத்தை ஏற்படுத்தி விடும்.

No comments:

Post a Comment