கோவையில் கடந்த 8 மாதங்களில் 458 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டைவிட தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்கொலைகள் அதிகரிப்பு
கோவை நகரில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குடிபழக்கத்தினால் குடும்ப தகராறு ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்வது, குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை காரணமாக தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன.
காதல்தோல்வி, படிப்பு பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் வாலிபர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். குடும்பம் நடத்த பணம் தராதது, குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைப்பது உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
458 பேர் தற்கொலை
கோவை நகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டுமாதம்வரை 8 மாதங்களில் மொத்தம் 458 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில் ஆண்கள்–362 பேர், பெண்கள்–85 பேர், வாலிபர்கள்–4, இளம்பெண்கள்–7. கடந்த ஆண்டு இதே 8 மாதங்களில் 426 பேர் தற்கொலை செய்துகொண்டனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 32 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கோவை மாவட்டம்
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம்வரை 241 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டு கோவை நகரை தவிர மாவட்டத்தில் 283 பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் தற்கொலை எண்ணிக்கை 42 அதிகரித்துள்ளது. பெருகி வரும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:–
காரணம் என்ன?
முன்பு கூட்டு குடித்தனமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இப்போது திருமணம் ஆனதும் தனிக்குடித்தனம் செல்வது அதிகரித்துள்ளது. இதனால் குடும்பதகராறு ஏற்படும்போது அறிவுரை கூறுவதற்கு பெரியவர்கள் இருப்பதில்லை. அவசர முடிவில் தற்கொலை எண்ணத்துக்கு செல்கிறார்கள். குடிபழக்கத்தினால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குடிபழக்கம் மற்றும் குடும்ப தகராறு காரணமாக தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாணிபவுடர்
தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில், பெரும்பாலும் சாணி பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். மஞ்சள் நிற ரசாயன பொடியான சாணிபவுடரை குடித்தவுடன் உடலின் அனைத்து செல்களையும் செயல்இழக்க செய்து உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. இதையொட்டி சாணிபவுடரை விற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பல கடைகளில் ரகசியமாக இதனை விற்று வருகிறார்கள். போலீசார் போதிய நடவடிக்கை எடுக்காததால் சாணி பவுடர் விற்பனையை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே சாணிபவுடர் விற்பனைக்கு முழுமையான தடை விதித்து, தீவிரமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பெருகி வரும் தற்கொலைகளை தடுக்க மனநல மருத்துவர்கள் மூலம் உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment