Monday, 19 August 2013

தேசிய கொடியை ஏற்றிய தலித் வாலிபர் கல்லால் அடித்துக் கொலை

தேசிய கொடியை ஏற்றிய பாவத்திற்காக பீகாரில் தலித் வாலிபர் கல்லால் அடித்துக் கொலை


பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 160 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ரோஹ்டா மாவட்டத்தின் பட்டி கிராமத்தில் தலித்கள் வழிபடும் ரவிதாஸ் முனிவரின் சிலை ஒன்றுள்ளது. 

இந்த சிலையை அகற்றிவிட்டு உள்ளூர் சுதந்திர போராட்ட வீரரான நிஷாந்த் சிங் என்பவரின் சிலையை வைக்க வேண்டும் என உயர் சாதியினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், சுதந்திர தினத்தன்று ரவிதாஸ் சிலையின் அருகே தலித் மக்கள் யாரும் சுதந்திர கொடியை ஏற்றக் கூடாது என்று உயர் சாதியினர் கட்டுப்பாடு விதித்தனர். 

அந்த கட்டுப்பாட்டை மீறி உள்ளூர் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அருண் சிங் தலைமையில் நூற்றுக்கணக்கான தலித் மக்கள் ஒன்றுகூடி தேசிய கொடியை ஏற்றினர். 

இதனால் ஆவேசமடைந்த உயர் சாதியினர், ரவிதாஸ் சிலையை அடித்து, நொறுக்கி நாசப்படுத்தினர். அவருக்காக அமைக்கப்பட்டிருந்த ஆலயத்தை தீயிட்டு கொளுத்தினர். ஆலயத்தை ஓட்டியுள்ள குடிசையையும் தீயிட்டு கொளுத்திய கும்பல், அங்கு வசித்த தலித் மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. 

திட்டமிட்ட இந்த தாக்குதலால் திகைத்துப்போன தலித் மக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தலைதெறிக்க ஓடினார்கள். அவர்களை விரட்டிச் சென்ற கும்பல், கம்புகளாலும், கற்களாலும் தாக்கியதில் ஒரு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் படுகாயங்களுடன் பாட்னா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 

பீகாரின் சசாரம் தொகுதிக்குள் இச்சம்பவம் நடந்த கிராமம் உள்ளதால், அத்தொகுதியின் எம்.பி.யான பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 

No comments:

Post a Comment