Friday, 16 August 2013

பல ஆயிரம் கோடி வக்பு வாரிய சொத்துகள் ஆக்கிரமிப்பு:மீட்க வாரியம் புது முயற்சி


தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, "வக்பு' வாரிய சொத்துகளை மீட்க, சொத்துகளை கணக்கெடுக்கும் பணியில், வாரியம் இறங்க உள்ளது. இதனால், ஆக்கிரமிப்பாளர்கள், "கம்பி' எண்ணும் நிலை ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள வக்பு (முஸ்லிம்) சொத்துகளை சரியான முறையில் பராமரிப்பதற்கும், வக்பு தொடர்பான அலுவல்களை நிர்வகிக்கவும், 1995ல் வக்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தில் உள்ள அறிவுரைகளின் படி, தமிழ்நாடு வக்பு வாரியம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு, ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை, திருத்தி அமைக்கப்படும். வக்புகள் மற்றும் வக்பு வாரிய சொத்துகள் தொடர்பாக எழும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, 25 மாவட்டங்களில், சார்பு கோட்டுகள், வக்பு தீர்ப்பாயங்களாகச் செயல்பட்டு வருகின்றன.மேலும், தமிழகத்தில் உள்ள, 6,700 வக்பு சொத்துகளை முழுமையாக அளவை செய்து கணக்கிட, நில அளவை மற்றும் நிலவரித்திட்ட கமிஷனர் தலைமையில், பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் மட்டும், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, வக்பு வாரிய சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளது, வக்பு வாரிய ஆய்வில் தெரியவந்து உள்ளது.எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து வக்பு வாரிய சொத்துகள் குறித்தும், வாரியம் கணக்கெடுத்து வருகிறது. வக்பு வாரிய சொத்துகளின் சர்வே எண்ணையும், அதன் அருகில் உள்ள சர்வே எண்ணையும் ஒப்பிட்டு, அதில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என்பதை, வருவாய்த் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, கண்டறிய உள்ளனர்.

ஆக்கிரமிப்புப் பகுதிகளை, மீண்டும் வக்பு வாரியத்தின் பேரில் பதிவு செய்யவும், ஆக்கிரமித்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவும் வக்பு வாரியம், நடவடிக்கை எடுக்க உள்ளது.இது குறித்து, வக்பு வாரிய தலைவர், தமிழ்மகன் உசேன் கூறுகையில், ""திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மட்டும், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வக்பு வாரியத்தில் பதிவு செய்யாத சொத்துகள் குறித்து, பள்ளிவாசல்களுக்குத் தகவல் தெரிவித்து, பதிவு செய்ய முயற்சித்து வருகிறோம்,'' என்றார்.

No comments:

Post a Comment