திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஒன்றரை மாதத்தில், 465 குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளாக பிறந்துள்ள தகவல், சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளிடம் குழந்தை வளர்ச்சி குறித்து பரிசோதனை நடத்தி, மருந்து மாத்திரை வழங்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில், அரசு மருத்துவமனையில், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி, கை, கால் அசைவு குறித்து, ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளாக பிறக்கும் குழந்தைகள் குறித்து, தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்த, சுகாதாரத் துறை உத்தரவிட்டது. திருப்பூர் மாவட்டத்தில், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகள் குறித்து, சுகாதாரத் துறையினர் நடத்திய ஆய்வில், கடந்த, 45 நாட்களில் மட்டும், 465 குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாக பிறந்துள்ள தகவல் தெரியவந்துள்ளது.
சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: குழந்தைகள் மாற்றுத்திறனாளியாக பிறக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. கர்ப்பமான பெண்களுக்கு, முறையான மருத்துவ பரிசோதனை, உணவு பழக்கம் வேண்டும்; டாக்டரின் ஆலோசனையின்றி மருந்து கடைகளில், உடம்புக்கு ஒவ்வாத மாத்திரைகள் வாங்கி உட்கொண்டால், குழந்தை மாற்றுத் திறனாளியாக பிறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. ஊனமாக பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலையை பரிசோதித்து, அதிகளவில் ஊனம் பாதித்த குழந்தைகளுக்கு, கோவை அரசு மருத்துவமனையிலும், குறைவாக ஊனம் பாதித்த குழந்தைகளுக்கு, திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையிலும், அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment