பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை 1.5 கோடி டொலருக்கு இணையதளத்தில் விற்று விடப்போவதாக அமெரிக்கர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
சுவை மாறாமல் 1943ம் ஆண்டிலிருந்து ஒரே மாதிரி கோக்க-கோலா தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தயாரிப்புக்கான ரகசிய குறிப்புகள் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள டவுன்ட்டவுன் நகரில் உள்ள பழங்கால பேழை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக இதுவரை கூறப்பட்டு வந்தது.
தற்போது அமெரிக்காவில் பழங்கால பொருட்களை விலைக்கு வாங்கி விற்கும் கிளிஃப் க்ளூக் என்பவர் ' கோக்க-கோலாவின் தயாரிப்பு ரகசியம் என்னிடம் உள்ளது' என்று பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து கிளிஃப் கூறுகையில், சமீபத்தில் ஒரு எஸ்டேட்டில் உள்ள பழங்கால பொருட்களை நானும், என் மனைவி அர்லேனும் ஏலத்தில் எடுத்தோம். அந்த பொருட்களில் ஒரு மரப்பெட்டியும் இருந்தது.
பெட்டிக்குள் இருந்த கடிதங்களில் கோக்க-கோலா தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள், தயாரிக்கும் முறை தொடர்பான குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.
இந்த குறிப்பு எனக்கு கிடைத்துள்ளது என்று கோக்க-கோலா நிறுவனத்திடம் நான் தெரிவித்தேன். 10 நாட்களுக்குள் என்னை தொடர்புகொள்வதாக அவர்கள் கூறினார்கள். ஆனால் சொன்ன வார்த்தையை அவர்கள் காப்பாற்றவில்லை.
எனவே அந்த தயாரிப்பு ரகசியத்தை இணையதளம்(ஆன் லைன்) மூலம் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளேன். ஆரம்ப விலையாக 50 லட்சம் அமெரிக்க டொலர்களை முன்னர் அறிவித்தேன். தற்பொழுது 1.5 கோடி டொலர்களாக உயர்த்தி விட்டேன்.
விருப்பம் உள்ளவர்கள் மேற்கொண்டு கேட்டு ஏலம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment