Wednesday, 15 May 2013

பாறையில் மோதிய படகு கடலில் மூழ்கி விபத்து


பக்தாவ் : மியான்மர் நாட்டில் 100 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கிய விபத்தில் ஏராளமானோர் இறந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வங்கதேசம், மியான்மர் நோக்கி நகர்ந்து வருகிறது. இது புயலாக உருவாகும் வாய்ப்பு உள்ளதால் இதற்கு ''மகசேன்'' என்று பெயரிடப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மியான்மரில் கடந்த ஆண்டு புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட இனக் கலவரத்தில் 192 பேர் இறந்தனர். இன கலவரத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அத்தகைய முகாம்கள் பல தாழ்வான பகுதிகளில் இருப்பதால், அங்குள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் ராக்கின் மாகாணம் பக்தாவ் பகுதியில் தாழ்வான பகுதியில் இருந்த அகதிகள் படகுகளில் ஏறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முயன்றனர். அந்த படகு பாறை மீது மோதி கவிழ்ந்ததில் அதில் இருந்தவர்கள் அனைவரும் மூழ்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அமைப்பு செய்தித் தொடர்பாளர் கிரிஸ்டன் மில்டிரென் கூறியதாவது:

''இன்ஜினுடன் கூடிய ஒரு பெரிய படகில் இன்ஜின் இல்லாத 2 சிறிய மரப்படகுகள் இணைக்கப்பட்டு அதில் 100 முதல் 150 பேர் கடலில் பயணம் செய்துள்ளனர். அப்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பயணம் செய்தவர்களின் பெரும்பாலோர் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment