திருவனந்தபுரம்: இந்தியாவில் இதயநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கிய தேசிய இதயவியல் மருத்துவர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையும், இந்திய இதயவியல் மருத்துவர்களின் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் தேசிய இதயவியல் மருத்துவர்கள் மாநாடு கிம்ஸ் மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. கிம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.ஐ. சகதுல்லா மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் இதய நோய் தடுப்பு, நவீன இதய சிகிச்சைகள் குறித்த கலந்துரையாடல் மற்றும் விவாதங்கள் நடைபெற்றன. மாநாட்டில் டாக்டர் ஜி.விஜயராகவன் பேசியதாவது: தற்போது உலகம் முழுவதும் இதய நோய் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில்தான் இதய நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. மேற்கத்திய நாடுகளில் வசிப்பவர்களை விட 10 வருடங்களுக்கு முன்பே இந்தியர்களுக்கு இதய நோய் வந்து விடுகிறது. கடந்த சில வருடங்களாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட தென் மாநிலங்களில் சிறுவர்களுக்கு ருமாட்டிக் காய்ச்சல் மற்றும் காவாசாகி நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் மெதுவாக தோல் உரிந்து விடும். நாளடைவில் இது இதயத்தையும் பாதிக்கும். இந்த நோயை தடுப்பது குறித்து இந்த மாநாட்டில் தீவிரமாக ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
2வது நாளாக இன்றும் மாநாடு நடக்கிறது.
No comments:
Post a Comment