சென்னை:வியாசர்பாடி சரகத்தில் நேற்று முன்தினம் எஸ்.ஏ., காலனியில் கோவில் திருவிழா தொடர்பாக நடந்த கூட்டத்தை கலைக்க கத்தியுடன் வலம் வந்த, 10க்கும் மேற்பட்ட ரவுடிகள், அந்த பகுதியில் உள்ள பெண்களை ஓட ஓட விரட்டினர்.இதை தொடர்ந்து, அந்த பகுதிவாசிகள், பாதுகாப்பு கேட்டு நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வியாசர்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள கொடுங்கையூர், எம்.கே.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொலை,கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. கடந்த ஆறு மாதங்களில் 20 கொலை சம்பவங்களும்,40க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.இவை தவிர, வெட்டுக்குத்து மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களும் கட்டுக்கடங்காமல் நடந்து வருகின்றன.இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ரவுடி கும்பல்கள்தான் என கூறப்படுகிறது.
கத்தியுடன் ரவுடிகள்:கடந்த 9ம்தேதி, இரவு 9.00 மணிக்கு, வியாசர்பாடி எஸ்.ஏ., காலனியில் உள்ள அம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கோவில் தலைவர் மனோகரன் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, 10க்கும் மேற்பட்ட ரவுடிகள்,கத்தியுடன் வந்து, கூட்டத்தை கலைத்தனர். பெண்களை ஓட ஓட விரட்டினர்.இதனால் கூட்டம் சிதறியது.
சிறிது நேரம் கழித்து, ரவுடிகள் தலைமறைவானதும்,பகுதிவாசிகள் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் குவிந்தனர்.ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்ககோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு உதவி கமிஷனர் மனோகரன், எம்.கே.பி.நகர் போலீசார் விரைந்து சென்று பகுதிவாசிகளை சமாதானப்படுத்தினர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.சம்பவம் தொடர்பாக நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது, ரவுடிகளின் அட்டகாசம் பொதுமக்களையும் மீறி போலீசாரையும் பாதிக்க துவங்கி உள்ளது.நேற்று மாலை,வியாசர்பாடி,பி.வி.காலனியில் உள்ள சமுதாய காவல் பணி மையத்துக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர்.இதில் மூன்று பிளாஸ்டிக் நாற்காலிகள் எரிந்து சாம்பலாகின.எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டதை அடுத்து, சமுதாய காவல் பணி மையத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டியல்:வியாசர்பாடி சுற்று வட்டாரத்தில் கடந்த ஆறு மாதங்களில் 20 கொலைகள் அரங்கேறியுள்ளன.கடந்த மே மாதம் மட்டும், 1ஆம் தேதி கொடுங்கையூரில் ஆட்டோ ஓட்டுனர் கொலை,2ம் தேதி தண்டையார் பேட்டையில் கோவில் உண்டியல் கொள்ளை, 13ம் தேதி 16லட்சம் ரூபாய் மதிப்பிலான தலைமுடி கொள்ளை,18ம் தேதி,தண்டையார்பேட்டையில் மாறுகால், மாறு கை வெட்டப்பட்டு அரசு ஊழியர் கொடூர கொலை, அதே நாள் கொடுங்கையூரில்,40 சவரன் கொள்ளை,30ம் தேதி வியாசர்பாடியில் கொலை என கொலை கொள்ளை பட்டியல் தொடர்ந்து நீண்ட வண்ணம் உள்ளது.
No comments:
Post a Comment